பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
தவெகவினர் காலணி வீசியதாக திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு பற்றி...
திமுகவுக்காக பிரசாரம் மேற்கொண்டபோது தன் மீது தவெகவினர் காலணி வீசியதாக திவ்யா சத்யராஜ் குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், திமுக தகவல் தொடர்பு பிரிவின் மாநில துணைச் செயலாளரான நடிகர் சத்யராஜின் மகள் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்றைய பிரசாரத்தின் போது தன் மீது தவெகவினர் காலணி வீசியதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“நான் செவ்வாய்க்கிழமை மாலை வீதிகளில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, தவெகவைச் சேர்ந்த குழுவினர் என் மீது காலணிகளை வீசினர். இதனால் பேரதிர்ச்சி அடைந்தேன். ஆனால் எனது பேச்சை நிறுத்தவில்லை. என் பெற்றோர் என்னை மிகுந்த துணிச்சலுடன் வளர்த்துள்ளனர்.
கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதற்காக உடல்ரீதியாகத் தாக்கப்படக் கூடாது. என் சகோதரர் சிபிக்கும் எனக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள் இருந்தாலும், நாங்கள் ஒருபோதும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. மாறாக ஒருவருக்கொருவர் அன்புடனே இருக்கிறோம். நாங்கள் மிகவும் முற்போக்குச் சிந்தனை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு பெண் தனக்கென ஒரு கருத்தைப் பேசியதற்காக அவர் மீது காலணி வீசப்படக்கூடாது. தவெக தலைவர் தனது கட்சி உறுப்பினர்களுக்குப் பெண்களை மதிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மரியாதைக்கு அனைத்துப் பெண்களும் தகுதியானவர்கள்.
மேலும், நான் அறிந்தவரையில் சங்கீதா விஜய் மிகவும் அற்புதமான பெண்களில் ஒருவர் என்பதையும், அவரும் மதிக்கப்பட வேண்டியவர் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகனும், திவ்யாவின் சகோதரருமான சிபி சத்யராஜ், தவெகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
TVK Members Hurl Footwear During Campaign! Divya Sathyaraj Alleges.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.