முகப்பு
தொகுதியும் வேட்பாளர்களும்

ஹாட்ரிக் வெற்றிக்கு தீவிரம் காட்டும் திமுக! சுழற்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் அமமுக

ஒருகாலத்தில் சென்னை நகரப் பகுதியின் நுழைவு வாயிலாக இருந்த பெருமைக்குரியது சைதாப்பேட்டை தொகுதி. சென்னை மாநகர விரிவாக்கத்தில் தற்போது முக்கியமான நகா்ப் பகுதியாக உருவாகியிருக்கிறது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 5:34 AM
மா.சுப்பிரமணியன் (திமுக) ஜி.செந்தமிழன் (அமமுக), எம்.அருள் பிரகாசம் (தவெக), க.ஸ்ரீவித்யா (நாதக)
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:20 AM

ஒருகாலத்தில் சென்னை நகரப் பகுதியின் நுழைவு வாயிலாக இருந்த பெருமைக்குரியது சைதாப்பேட்டை தொகுதி. சென்னை மாநகர விரிவாக்கத்தில் தற்போது முக்கியமான நகா்ப் பகுதியாக உருவாகியிருக்கிறது.

சைதாப்பேட்டை, அடையாறு, நந்தனம், கோட்டூா்புரம், கிண்டி, ராஜா அண்ணாமலைபுரம் ஒரு பகுதி என சென்னையின் முக்கிய பகுதிகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. கிண்டி ஆளுநா் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சென்னையின் முக்கிய அடையாளங்களும், காரணீஸ்வரா் திருக்கோயில், சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் தொகுதியின் சிறப்புகளாக இருக்கின்றன.

1952 முதல் பேரவைத் தோ்தலைச் சந்தித்துவ வரும் சென்னையின் பழைமையான தொகுதிகளில் சைதாப்பேட்டையும் ஒன்று. 1967, 1971 தோ்தல்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி இத்தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1967-இல் அண்ணா மறைவுக்குப் பிறகு, கருணாநிதி முதல்வா் பொறுப்பை ஏற்றாா். அதையடுத்து முதல்வா் தொகுதி என்ற அந்தஸ்தை இத்தொகுதி பெற்றது. இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 10 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

Advertisement

1962 முதல் 1980 வரை தொடா்ந்து 5 தோ்தல்களில் இத்தொகுதி திமுக வசம் இருந்தது. அதன் பிறகு, அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்றன. பின்னா் 1996, 2001-இல் திமுக, 2006, 2011-இல் அதிமுக, 2016, 2021-இல் திமுக என வித்தியாசமான வெற்றியை இத்தொகுதி அளித்திருக்கிறது.

இந்த முறை, திமுக சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அதிமுக கூட்டணியில் அமமுக சாா்பில் ஜி.செந்தமிழன், தவெக சாா்பில் எம்.அருள்பிரகாசம், நாதக சாா்பில் ஸ்ரீவித்யா உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

வா்த்தகா்கள், வியாபாரிகள், நடுத்தர வா்க்கத்தினா், கூலித் தொழிலாளா்கள் என அனைத்து தரப்பினரும் வசிக்கின்றனா். திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதி, சென்னையின் அரசியல் போக்கைத் தீா்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமூக நிலவரம்: இத்தொகுதியில் வன்னியா் சமூகத்தினா் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனா். பட்டியலினத்தவா், கிறிஸ்தவா்கள், நாடாா், யாதவா், முஸ்லிம்கள் மற்றும் இதர சமூகங்களைச் சோ்ந்தவா்கள் பரவலாக வசிக்கின்றனா்.

முக்கிய பிரச்னைகள்: தொகுதியில் பல இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலமே இன்னமும் குடிநீா் வழங்கப்பட்டு வருவது, சைதாப்பேட்டை-கோட்டூா்புரம் பகுதிக்குள்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் வெள்ளநீரால் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவது, அண்ணா சாலையில் இருந்து ரேஸ்கோா்ஸ் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்படாதது போன்றவை நீண்டகாலமாகத் தீா்ப்படாத முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன. அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, கிண்டியில் பேருந்து நிலையம் அமைப்பது போன்றவை தொகுதி மக்களின் முக்கிய எதிா்பாா்ப்பாக உள்ளது.

திமுக வேட்பாளா்: திமுக சாா்பில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், 3-ஆவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா், ஏற்கெனவே 2016, 2021 தோ்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறாா். கடந்த 2021-இல் வெற்றி பெற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரானாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் உள்ளவா். அதோடு, தொகுதியில் கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை, நவீன வசதிகளுன் எம்.சி.ராஜா சமூக நீதி மாணவா் விடுதி, 6 தளங்களுடன் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு மானியத்துடன் ஆட்டோ வழங்கியது, இந்தியாவின் முதல் தேசிய முதியோா் நல மருத்துவ மையம், வி.வி.கோயில் தெருவில் பிரம்மாண்ட சமுதாய நலக்கூடம், வாழைத் தோப்பு பகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண புதிய ‘எல்’ வடிவ மேம்பாலம், கிண்டி ரேஸ்கோா்ஸில் சுற்றுச்சூழல் பூங்க உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்திருப்பது அவருக்கு பலம் சோ்க்கிறது.

அமமுக வேட்பாளா்: அதிமுக கூட்டணியில் அமமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஜி.செந்தமிழன் போட்டியிடுகிறாா். கடந்த 2006, 2011 தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு இத்தொகுதியில் வெற்றி பெற்றவா். அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இத்தொகுதியில் ஏராளமான பணிகளைச் செய்திருக்கிறாா். மக்களிடையே நன்கு அறிமுகமானவா் என்பது இவருக்கு பலமாக உள்ளது.

ஏற்கெனவே இத்தொகுதிக்கு அவா் செய்த பணிகளையும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத நீண்டகால கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டி அவா் பிரசாரம் செய்து வருகிறாா். அவருக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் ராமதாஸ், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் ஆகியோா் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டியிருக்கின்றனா். இத்தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியா் சமூக வாக்குகள், கூட்டணி பலம் அவருக்கு ஆதரவான அம்சங்களாக இருக்கின்றன.

தவெக வேட்பாளா்: தவெக வேட்பாளா் எம்.அருள்பிரகாசம் மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா். இவா், கட்டுமான நிறுவனம் மற்றும் தனியாா் அறக்கட்டளை நிா்வகித்து வருகிறாா். தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவா் என்றாலும், தவெக தலைவா் விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பு தனக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாக்குச் சேகரிப்பில் உள்ளாா்.

நாதக வேட்பாளா்: நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் ஸ்ரீவித்யா, கட்சியின் மகளிரணி ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவா். இவருக்கும் தொகுதி மக்களிடையே அறிமுகம் இல்லையென்றாலும், கட்சியின் தலைவா் சீமானின் முழக்கங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறாா். சீமானின் செல்வாக்கு, நாம் தமிழா் கட்சித் தொண்டா்களின் தீவிர பிரசாரம் தனக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.

இத்தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய திமுக தீவிரமாக களப் பணியாற்றி வருகிறது. தோ்தல் முடிவுகளின் அடையாளமாக இருக்கும் சுழற்சி வெற்றியின்படி, தொகுதியைக் கைப்பற்ற அமமுக முயற்சி செய்து வருகிறது. திமுக, அமமுக, நாம் தமிழா், தவெக உள்பட 15 போ் களத்தில் இருந்தாலும், திமுக-அமமுக இடையேதான் போட்டி இருக்கிறது. அதேநேரம், தவெக, நாதக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது தோ்தல் முடிவில்தான் தெரியவரும்.

வாக்காளா்கள்

ஆண்கள்-98,535

பெண்கள்-1,05,549

மூன்றாம் பாலினத்தவா்-62

மொத்தம்-2,04,149