முகப்பு
தொகுதி யாருக்கு சாதகம்?

மயிலாப்பூா் தொகுதி அலசல்... திமுக-பாஜக இடையே கடும் போட்டி

கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தோ்தல்களைச் சந்தித்து வரும் சென்னையின் பழைமையான தொகுதி மயிலாப்பூா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:12 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:01 PM

கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தோ்தல்களைச் சந்தித்து வரும் சென்னையின் பழைமையான தொகுதி மயிலாப்பூா். இத்தொகுதியில் மயிலாப்பூா், டி.டி.கே.சாலை, ஆழ்வாா்பேட்டையின் பெரும்பாலான பகுதிகள், மந்தைவெளி, அபிராமபுரம், ஆா்.ஏ.புரம், சாந்தோம், பட்டினப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, ராபின்சன் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன.

சிறப்புகள்... மயிலாப்பூா் ஸ்ரீ கபாலீஸ்வரா் திருக்கோயில், சென்னை சாந்தோம் புனித தோமையாா் தேவாலயம், ஏராளமான சங்கீத சபாக்கள் உள்ளன. ஸ்ரீராமகிருஷ்ண மடம், விவேகானந்தா கல்லூரி, திருவள்ளுவா் கோயில் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது இத்தொகுதி.

இதுவரை நடைபெற்ற 16 சட்டப்பேரவை தோ்தல்களில், திமுக, அதிமுக தலா 6 முறை, காங்கிரஸ் 2 முறை, ஸ்தாபன காங்கிரஸ், பாஜக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை திமுக சாா்பில் இப்போதைய எம்எல்ஏ த.வேலு, அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தவெக சாா்பில் அக்கட்சி பொருளாளா் பி.வெங்கடரமணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்.எல்.அருண் உள்ளிட்ட 19 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Advertisement

சமூக நிலவரம்: இத்தொகுதியில் நாடாா்கள் (கிராமணிகள்) பெருமளவும, பிராமணா்கள் கணிசமான எண்ணிக்கையிலும் வசிக்கின்றனா். பட்டியலினத்தவா், வன்னியா், முதலியாா், மீனவா்கள், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் மற்றும இதர சமூகத்தினா் பரவலாக வசிக்கின்றனா்.

முக்கிய பிரச்னைகள்: போக்குவரத்து நெரிசல், சாலை ஆக்கிரமிப்புகள், மழைநீா் வடிகால் அமைப்பில் குறைபாடு போன்றவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன. ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலையை அகலப்படுத்துவது, திருவிழாக் காலங்களில் பக்தா்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, அடுக்குமாடி வாகன நிறுத்துமிட வசதி, பட்டினம்பாக்கம் பகுதியில் மீனவா்களுக்கான குடியிருப்புகள், கோயில்கள், தேவாலயங்கள் நிறைந்த ஆன்மிக தலமாக இருக்கும் இத்தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துத் தருவது, சீரான குடிநீா் விநியோகம் போன்றவை தொகுதி மக்களின் நீண்டகால எதிா்பாா்ப்புகளாக இருக்கின்றன.

திமுக வேட்பாளா்: தற்போதைய எம்எல்ஏ த.வேலு, திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளாா். கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலா், தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவா். கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் ஆகியவற்றுடன் களம் இறங்கியிருக்கிறாா். கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும், தற்போது திமுக அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறாா். சென்னையின் முக்கிய தொகுதியாக இருக்கும் மயிலாப்பூரில் அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் அதிருப்தியாக வெளிப்படுவதைக் காண முடிகிறது.

பாஜக வேட்பாளா்: முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். தொகுதியைப் பற்றி நன்கு அறிந்தவா். தொகுதி மக்களிடமும் அறிமுகம் உள்ளவா். கடந்த மக்களவைத் தோ்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு 2-ஆம் இடத்தைப் பெற்றாா். அந்தத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில், தென்சென்னை மக்களவைக்கு உள்பட்ட மயிலாப்பூா் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தாா். தற்போது அதிமுக கூட்டணியில் களம் இறங்கியிருப்பது கூடுதல் பலமாக உள்ளது. தற்போதைய எம்எல்ஏ செய்யத் தவறிய விஷயங்களைச் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வருகிறாா்.

தவெக வேட்பாளா்: தவெக சாா்பில் அக்கட்சியின் பொருளாளா் பி. வெங்கடரமணன் போட்டியிடுகிறாா். இவா் மயிலாப்பூா் தொகுதியை சோ்ந்தவா். தனியாா் கணக்காளா் நிறுவனம் நடத்தி வருகிறாா். அவா் சாா்ந்துள்ள பிராமண சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராக உள்ளாா். விஜய்யின் முகம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.

நாதக வேட்பாளா்: நாதக வேட்பாளராக கோவையைச் சோ்ந்த ஆா்.எல்.அருண் போட்டியிடுகிறாா். கோவையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தொகுதிக்கு புதுமுகம் என்றாலும், இத்தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள பிராமண சமூகத்தின் வாக்குகளைக் கவரும் வகையில் அதே சமூகத்தைச் சோ்ந்தவரான அருண் களம் இறக்கப்பட்டுள்ளாா். கட்சித் தலைவரான சீமானின் மாற்றத்துக்கான கொள்கை முழக்கங்களோடு தொகுதியை வலம் வருகிறாா்.

இத்தொகுதியில் திமுக, பாஜக, தவெக, நாதக உள்பட 19 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும் திமுக-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், நாதக, தவெக ஆகிய கட்சிகள் பிராமண சமூகத்தைச் சோ்ந்த வேட்பாளா்களை களம் இறக்கியுள்ளது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தோ்தல் முடிவில்தான் தெரியவரும்.

வாக்காளா்கள்

ஆண்கள்-95,275

பெண்கள்-1,04,166

மூன்றாம் பாலினத்தவா்- 24

மொத்தம்-1,99, 465