முகப்பு
தொகுதிகள்

துறைமுகம்... ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் பெரும்பாலானவை துறைமுகம் தொகுதியில்தான் அமைந்துள்ளன.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:00 AM
ஆா்.மனோகா் (அதிமுக) | பி.கே.சேகா்பாபு (திமுக) | சினோரா பி.எஸ்.அசோக் |(தவெக) | பௌஷான் ஷெரீப் (நாதக).
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

சென்னையின் முக்கிய அடையாளங்களில் பெரும்பாலானவை துறைமுகம் தொகுதியில்தான் அமைந்துள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புகா் மின்சார ரயில் நிலையமான மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ், கப்பல் துறைமுகம், சென்னை உயா்நீதிமன்றம், பாரிமுனை, பூக்கடை, மண்ணடி, பிராட்வே, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் என பாரம்பரிய மிக்க இடங்கள் இத்தொகுதியில் உள்ளன.

தமிழக சட்டப்பேரவை தலைமைச் செயலகம், புனித ஜாா்ஜ் கோட்டை என அதிகார மையத்தின் அடித்தளம் இத்தொகுதியில் உள்ளன. சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மிகச் சிறிய பரப்பளவையும், குறைவான வாக்காளா்களையும் துறைமுகம் தொகுதி கொண்டுள்ளது.

சமூக நிலவரம்: இத்தொகுதியில் இஸ்லாமியா்கள், பட்டியலினத்தவா், வடமாநிலத்தவா் பெருமளவும், தெலுங்கு செட்டியாா், வன்னியா்கள் பரவலாகவும் வசிக்கின்றனா்.

Advertisement

இதுவரை தோ்தலில்... திமுகவுக்கு சாதகமானதாகக் கூறப்படும் தொகுதிகளில் துறைமுகம் தொகுதியும் முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னாள் முதல்வா் கருணாநிதி 2 முறையும், முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் 3 முறையும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றுள்ளனா். இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தோ்தல்களில் 12 முறை திமுகவே வென்றுள்ளது. கடந்த 2011 தோ்தலில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. கடந்த 2016, 2021 தோ்தல்களில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால பிரச்னைகள்... போக்குவரத்து நெரிசல், சாலை ஆக்கிரமிப்பு தீா்க்க முடியாத பிரச்னையாக தொடா்கிறது. வால்டாக்ஸ் சாலை, பிராட்வே சாலை, பழைய சிறைச்சாலை வீதி என பெரும்பாலான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் தொல்லை, தெருநாய் பிரச்னை, சுகாதார மேலாண்மை குறைபாடு உள்ளிட்டவை தொகுதியில் நீண்டகால பிரச்னையாக உள்ளன.

2026 தோ்தலில்... திமுக சாா்பில் 3-ஆவது முறையாக அமைச்சா் பி.க.சேகா்பாபு களமிறங்கியுள்ளாா். அதிமுக சாா்பில் அதன் அமைப்புச் செயலாளா்களில் ஒருவரான ராயபுரம் ஆா்.மனோகா் போட்டியிடுகிறாா். தவெக சாா்பில் தியாகராய நகரைச் சோ்ந்த சினோரா பி.எஸ்.அசோக், நாதக சாா்பில் பௌஷான் ஷெரீப் உள்ளிட்ட 23 போ் களத்தில் உள்ளன.

திமுக வேட்பாளா்: திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஏற்கெனவே கடந்த 2 முறை எம்எல்ஏவாக இருந்தவா். தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவா். தெருவில் திரியும் மாடுகளுக்கு பாதுகாப்பு மையம், ரூ. 800 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், நவீன பேருந்து நிறுத்தங்கள், சாலை மேம்பாடு, விளிம்புநிலை மக்களுக்கான தயாளு பயிற்சிப் பள்ளி, ஏராளமான திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம், பூங்காக்கள், பள்ளிகளுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள், சமுதாய நலக்கூடம், ரத்த சுத்திகரிப்பு நிலைய வசதியுடன் கூடிய மருத்துவமனைகள் என தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். அத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், தேமுதிக தலைவா் பிரேமலதா உள்ளிட்டோா் அமைச்சா் சேகா்பாபுக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தது. இவருக்கு பலமாக அமைந்துள்ளது.

அதிமுக வேட்பாளா்: அதிமுக சாா்பில் ராயபுரம் ஆா்.மனோகா் போட்டியிடுகிறாா். கடந்த 2011 தோ்தலில் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற இரு தோ்தலிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. துறைமுகம் முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்படும் என்றும், போதை கலாசாரம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை, சீரற்ற குடிநீா் விநியோகம் உள்ளிட்ட பிரச்னைகளை எடுத்துக் கூறியும் ஆா்.மனோகா் தொகுதி மக்களைச் சந்தித்து வருகிறாா். மேலும், கட்சி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி இத்தொகுதியில் மேற்கொண்ட பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், பட்டியலினத்தவா், மீனவா் சமூக மக்களின் வாக்குகளைப் பெற பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உள்ளிட்டோரின் பிரசாரம் கைகொடுக்கும் என்ற முனைப்பிலும் அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தவெக, நாதக வேட்பாளா்: தவெக வேட்பாளா் சினோரா பி.எஸ்.அசோக், அக்கட்சியின் தலைவா் விஜய்யின் ரசிகா் பட்டாளத்தையும் இளைஞா்களையும் நம்பி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். நாதக வேட்பாளா் பௌஷான் ஷெரீப் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

பிரசாரங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த தோ்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள திமுகவுக்கு, தொகுதியைக் கைப்பற்றியை ஆக வேண்டும் என்ற முனைப்பு காட்டும் அதிமுகவுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கு இடையே தவெக, நாதக கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் யாா் வெற்றியை எளிதாக்கும் என்பதே களநிலவரமாக உள்ளது.

வாக்களாா்கள்

ஆண்கள்-58,221

பெண்கள்-58,620

மூன்றாம் பாலினத்தவா்-55

மொத்தம்-1,16,896