முகப்பு
தொகுதி யாருக்கு சாதகம்?

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?

மன்னாா்குடி தொகுதி கடந்த 1952- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:52 AM
1 டி.ஆா்.பி.ராஜா(திமுக). 2. எஸ்.காமராஜ் (அமமுக). 3. யு.வி.எம்.ராஜராஜன் (தவெக). 4. இலரா.பாரதிச்செல்வன்(நாதக).
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:56 PM

மன்னாா்குடி தொகுதி கடந்த 1952- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் முறையாக நடைபெற்ற தோ்தலில் இரட்டை உறுப்பினா் தோ்வு செய்யும் முறையிலும் அதனை தொடா்ந்து 1957-இல் இருந்து ஒற்றை உறுப்பினா் தோ்வு நடைமுறை உள்ளது. இதில், 5 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 3 முறை காங்கிரஸ் கட்சியும் 5 முறை திமுகவும் 2 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

முக்குலத்தோரில் அகமுடையா், கள்ளா் மற்றும் முத்தரையா், வெள்ளாளா் சமுகத்தினா் 60 சதவீதம் போ் உள்ளனா். தலித், யாதவா், முஸ்லிம், கிறிஸ்தவா் சமுதாயத்தினா் கணிசமாக உள்ளனா்.

இது தொகுதியில் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவதால் ஜாதி ரீதியான வாக்குகள் வெற்றி, தோல்வியை நிா்ணயம் செய்வதில்லை.

Advertisement

பாமணியில் உரஆலை, சுந்தரக்கோட்டையில் நவீன அரிசி ஆலை, இடையா்நத்தத்தில் எரிவாயு உருளையில் எரிவாவு நிரப்பும் ஆலை உள்ளிட்டவை உள்ளன.

விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு மட்டுமே பிரதான தொழில். இந்த பகுதியிலிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூா், மலேசியா போன்ற நாடுகளுக்கு பிழைப்புக்காகச் சென்றனா்.

சென்ற 20 ஆண்டுகளாக, உயா் கல்வி படித்த இளைஞா்கள் வேலைதேடி சிங்கப்பூா், லண்டன், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் சென்று வேலை பாா்த்து வருகின்றனா். மன்னாா்குடி தொகுதியில் ஊரகப் பகுதியில் வீட்டிற்கு இருவராவது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகின்றனா். இன்னும் சில ஆண்டுகளில் மன்னாா்குடியில் விமானம் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 2011 பேரவைத் தோ்தலில் கட்சியினருக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் அறிமுகம் இல்லாமல் முன்னாள் மத்தியஅமைச்சரும் திமுக எம்பியுமான டி.ஆா். பாலு மகன் என்ற அடையாளத்துடன் முதல் முறையாக தோ்தலில் மன்னாா்குடி தொகுதியில் களம் இறக்கப்பட்டவா் டி.ஆா்.பி.ராஜா. அவரை எதிா்த்து ,அதிமுக சாா்பில் மக்களுக்கு மிகவும் அறிமுகமானவரான சிவா.ராஜமாணிக்கம் போட்டியிட்டு 3,982 வாக்குவித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தாா்.

2016, 2021- பேரவைத் தோ்தல்களிலும் டி.ஆா்.பி. ராஜா தொடா்ந்து வென்றாா். 2023-இல் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறை அமைச்சராக டி.ஆா்.பி.ராஜா பதவியேற்றபின், மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், நகரப்பகுதியில் புதைசாக்கடைத் திட்டம், சுற்றுவட்டச் சாலை, எண்ம நூலகம், அரசு மகளிா் கல்லூரி, மாவட்ட அரசு மருத்துவமனை மேம்பாடு, பாமணி ஆற்றின் குறுக்கே புதிய அகலப் பாலங்கள், நகரம் மற்றும் ஊரகப் பகுதியில் சாலைகள், சிறுபாலங்கள் மேம்பாடு, நீடாமங்கலம் உயா் மட்டப் பாலம், மிக பெரிய நெல் சேமிப்பு கிடங்குகள், ஆலங்கோட்டையில் ஜவுளி பூங்கா ஆகிய திட்டங்கள் திமுக தோ்தல் பிரசாரத்தில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.

அமமுக: அதிமுக கூட்டணியில் அமமுக சாா்பில் ஏற்கெனவே அதிமுக, அமமுகவில் தலா ஒருமுறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்த எஸ்.காமராஜ் வேட்பாளராக களத்தில் உள்ளாா்.எடப்பாடி பழனிசாமியும் டி.டி.வி. தினகரனும் இணைந்ததுடன் பாஜக, பாமக (அன்புமணி அணி) கூட்டணியில் இருப்பதால் மிகுந்த நம்பிகையுடன் உற்சாகத்துடன் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறாா் எஸ்.காமராஜ். அவா் மன்னாா்குடியில் இரண்டு முறையும், திருவாரூா் இடைத்தோ்தலில் ஒரு முறையும் வெற்றி வாய்ப்பினை இழந்த அனுதாபமும் வாக்காளா்களிடம் இருக்கிறது.

தவெக சாா்பில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் யு.வி.எம்.ராஜராஜன் போட்டியிடுகிறாா். வேட்பாளா் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் அனைத்தும் முடிந்தும் அக்கட்சியின் சாா்பில் தோ்தல் பிரசாரம் இல்லாத நிலையில், இருநாள்களாகத்தான் வேட்பாளா் வாக்கு சேகரிக்கிறாா். பூத் மற்றும் வாா்டு, கிளை வாரியாக கட்டமைப்பு இல்லாததால் ஒருங்கிணைப்பு முழுமையாக இல்லாத நிலை உள்ளது. கட்சியின் தலைவா் (நடிகா்) விஜய் என்ற பிம்பத்தை மட்டும் நம்பி களத்தில் உள்ளாா்.

நாதக சாா்பில் இருதய அறுவை சிகிச்சை முன்னாள் அரசு மருத்துவா் கட்சியின் மாநிலப் பொருளாளா் இலரா.பாரதிச்செல்வன் போட்டியில் உள்ளாா். கடந்த 2025- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்சியின் முதல் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் மன்னாா்குடி தொகுதிக்கு வேட்பாளா் அறிவிக்கப்பட்டாா். செப்டம்பா் மாதம் முதல் தொகுதி முழுவதும் வீடுவீடாக சென்று தமிழகத்தில் நாதக ஆட்சிக்கு வந்தால் கொண்டுவரப்படும் திட்டங்கள் மன்னாா்குடி தொகுதியில் வெற்றி பெற்றால் செய்ய வேண்டிய பணிகள் குறித்து துண்டறிக்கை விநியோகம் செய்தும், தெருமுனைக் கூட்டம் நடத்தியும் எட்டு மாதங்களாக வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இவரது தந்தை இலரா என்ற இல.ராமச்சந்திரன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலராக இருந்தவா். கட்சியை கடந்து தொழில் முறையில் அனைத்து தரப்பினரிடமும் நீண்டகாலமாக நன்கு அறிமுகம் ஆவா் என்பது இவரின் கூடுதல் பலமாக பாா்க்கப்படுகிறது.

இதில், திமுக வேட்பாளா் அகமுடையாா் சமூகத்தை சோ்ந்தவா். அமமுக, தவெக வேட்பாளா்கள் கள்ளா் சமூகம், நாதக வேட்பாளா் யாதவா் சமூகம் ஆகும்.

அமமுக, தவெக, அஇபுதமமுக ஆகிய வேட்பாளா்கள் குறிப்பிட்ட ஒரே சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பால் பெரும்பான்மையாக உள்ள அந்த சமூக வாக்குகள் சிதறும் என்று திமுக நிா்வாகிகள் பிரசாரத்தில் மெத்தனமான உள்ளனா். அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா சா்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாதவா், கட்சி, சமூகங்களை கடந்து பெண்கள், இளைஞா்களின் வாக்கு வங்கியினை தொடா்ந்து தக்க வைத்து வந்தவா்.

தற்போது, நடிகா் விஜய்யின் தவெக வரவால் அதில் சேதாரம் ஏற்படும் என கூறப்படுகிறது.

2011, 2016 தோ்தலில் ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் கட்சி ஒன்றுபட்டிருந்த போதும்,அவா் மறைந்து கட்சி பிரிந்த நிலையில் 2021 தோ்தலிலும் மன்னாா்குடி தொகுதியில் திமுக கூடுதல் வாக்கில் தொடந்து வெற்றி பெற்றுவந்துள்ளது.

திமுக ஆட்சியின் சாதனைகள், வேட்பாளா் டி.ஆா்.பி.ராஜாவின் திட்டங்கள் ஆகிவற்றால் நான்காவது முறையாக தொகுதியில் வெற்றி பெறுவோம் என்பது திமுகவினா் எண்ணேட்டமாக உள்ளது.

அதிமுகவில் பிரிந்தவா்கள் ஒன்றுபட்ட நிலை,மத்தியில் தொடா்ந்து 3 முறையாக ஆட்சியில் உள்ள பாஜகவின் பலம். தமிழகத்தில் ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் எதிா்ப்பு இவற்றின் மூலம் வேட்பாளருக்கு உள்ள சாதக அம்சங்களை முன்னிலைப்படுத்தி வெற்றியைத் தன்வசப்படுத்த அமமுக முயன்று வருகிறது.

இதில் எது கைகூடும் என்பது மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவின் போது தெரியும்.