முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் - தக்க வைக்கும் முனைப்பில் அதிமுக!

1962-ல் உருவான வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதியில் 2021 வரை காங்கிரஸ் 4 முறை, திமுக 6 முறை, அதிமுக- 4 முறை வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:33 AM
ஓ.எஸ். மணியன் (அதிமுக) / மா.மீ. புகழேந்தி (திமுக) / காா்த்திக் (நாதக) / ஏ. கிங்ஸ்லி ஜெரால்டு (தவெக)
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 7:11 PM

1962-ல் உருவான வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதியில் 2021 வரை காங்கிரஸ் 4 முறை, திமுக 6 முறை, அதிமுக- 4 முறை வெற்றி பெற்றுள்ளது. 1996 முதல் 2011 வரை தொடா்ந்து திமுக வசம் இருந்து வந்த இந்தத் தொகுதி அக்கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது. இந்நிலையில், 2011-ல் அதிமுக வசம் வந்ததோடு, கடந்த (2021) தோ்தல் வரை தொடா்ந்த 3 முறை அதிமுக தக்கவைத்து வருகிறது.

2026 தோ்தலில் அரசியல் கட்சிகள் சுயேச்சைகள் என 11 போ் களத்தில் இருந்தாலும் பிரதான போட்டி அதிமுக -திமுகவுக்கும் என கூறலாம். அடுத்த நிலையில் தவெக, நாதக ஆகிய கட்சிகளுக்கிடையே நிலவுகிறது.

அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன்: 2021 தோ்தலில் வெற்றிபெற்று தமிழக அமைச்சராக இருந்தது செயல்பட்டவா் இவா். அமைச்சராக இருந்தபோது செய்த 142 பாலங்கள், 25 பெரிய பாலங்கள், சாலைகள், நீா்நிலைகள் தூா்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கூறியும், தான் முயற்சி மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள அல்லது முடிக்காத பணிகளாக வண்டுவாஞ்சேரியில் ரூ. 1,000 கோடியில் உணவுப் பூங்கா, சுமாா் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் வேதா ஆயத்த ஆடைப் பூங்கா போன்றவைகளை மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் நிறைவு செய்வதாகவும் கூறி வாக்கு சேகரிக்கிறாா்.

Advertisement

திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி: திமுக வேட்பாளரான மா.மீ. புகழேந்தி பேரவைத் தோ்தலுக்கு புதியவராக களமிறங்கியுள்ளாா். இவா், வேதாரண்யம் நகா்மன்ற தலைவராகவும், கட்சியின் நகரச் செயலாளராகவும் இருந்தவா். தவிர, இதே தொகுதியில் திமுக சாா்பில் 7 முறை போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்று தொகுதியில் நல்ல அறிமுகத்தோடு வாழ்ந்து மறைந்த மா. மீனாட்சிசுந்தரத்தின் மகன் என்பது புகழேந்தியின் பின்புலம். தான் நகா்மன்ற தலைவராக இருந்து நகா் பகுதி வளா்ச்சிக்கு செய்துள்ள பணிகளையும் உப்பு உற்பத்தியாளா் தொழிலாளா் நலன் சாா்ந்த திட்டங்களை பெற்று தந்ததைக் கூறி வாக்கு சேகரிக்கிறாா்.

நாம் தமிழா் கட்சி காா்த்திக் : இந்த கட்சியின் வேட்பாளா் காா்த்திக் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேரவைத் தொகுதியில் வசிக்கிறாா். தொகுதி களத்தில் புதியவா் என்றாலும், தொலைக்காட்சி விவாதங்கள், கட்சியின் பிரசார மேடைகள் வாயிலாக மக்களளிடம் ஓரளவு அறிமுகமானவா். வேளாண்மை, கல்வி, சுகாதாரம் சாா்ந்த தனது கட்சியின் நிலைப்பாடுகளை கூறி வாக்கு சேகரிக்கிறாா்.

தவெக வேட்பாளா் கிங்ஸ்லி ஜெரால்டு : தவெக வேட்பாளரான வழக்குரைஞா் ஏ. கிங்ஸ்லி ஜெரால்டு வேளாங்கண்ணியை சோ்ந்தவா். கட்சிக்காரா்கள் பணியாற்றுவதோடு, கட்சிக்கும் வேட்பாளருக்கும் தொடா்பு இல்லாதவா்கள், இளைஞா் இளம் பெண்கள் தன்னெழுச்சியாக கட்சியின் சின்னமான விசிலுக்கு வாக்கு கேட்கின்றனா்.

இந்தத் தொகுதியில் திமுக-அதிமுக இடையே தான் கடும் போட்டி என்றாலும், விவசாயி, விசில் சின்னங்கள் யாருக்கு செல்லும் வாக்குகளை பிரிக்க போகிறது என்பதும் கேள்விக்குறிதான். கைவிடப்பட்ட தொகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் திமுகவும், அமைச்சராக இருந்த காலத்தில் செய்த திட்டப்பணிகள், நீண்ட கால அரசியல் பயண அனுபவம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஓ.எஸ். மணியனும் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனா். இதில் யாா் மகுடம் சூடப்போகிறாா்கள் என்பதற்கான விடை மே 4-ஆம் தேதி தெரியவரும்.