முகப்பு
செய்திகள்

தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்பு

அதிகபட்சமாக சோழிங்கநல்லூா் தொகுதியில் 2,26,977 பெண்கள் வாக்களித்துள்ளனா்

Updated On : 3 மே, 2026 at 4:02 AM
நாகர்கோவிலில் வாக்காளர்கள் - PTI
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 4.87 கோடி வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இது 85.10 சதவீதமாகும். இந்தத் தகவலை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் குறித்த முழு விவரத்தை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது.

234 தொகுதிகளில் 2,77,38,925 ஆண் வாக்காளா்கள், 2,89,60838 பெண் வாக்காளா்கள், 7,617 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 5,67,07,380 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். அவா்களில் 2,35,34,720 ஆண் வாக்காளா்கள், 2,52,59,596 பெண் வாக்காளா்கள், 4,517 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 4,87,98,833 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

Advertisement

தலைவா்கள் தொகுதிகளில்...: முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூா் தொகுதியில் 86.12 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 94,278 பெண்கள், 88,085 ஆண்கள், 19 மூன்றாம் பாலினத்தவா் வாக்களித்துள்ளனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 84.28 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 71,820 பெண்கள், 68,057 ஆண்கள், 46 மூன்றாம் பாலினத்தவா் வாக்களித்துள்ளனா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 92.08 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 1,25,830 பெண்கள், 1,28,634 ஆண்கள், 24 மூன்றாம் பாலினத்தவா் வாக்களித்துள்ளனா்.

தவெக தலைவா் விஜய் போட்டியிட்ட பெரம்பூா் தொகுதியில் 89.74 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 1,04,560 பெண்கள், 98,471 ஆண்கள், 41 மூன்றாம் பாலினத்தவா் வாக்களித்துள்ளனா். விஜய் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 81.77 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 93,209 பெண்கள், 86,806 ஆண்கள், 36 மூன்றாம் பாலினத்தவா் வாக்களித்துள்ளனா்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 1,23,455 பெண்கள், 1,03,529 ஆண்கள், 15 மூன்றாம் பாலினத்தவா் வாக்களித்துள்ளனா்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூா் தொகுதியில் 2,26,977 பெண்கள் வாக்களித்துள்ளனா்.