முகப்பு
இந்தியா

நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் சவால்

கர்நாடகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து பதில்

Updated On : 22 ஏப்ரல் 2013, 5:04 am IST
பகிர்:

கர்நாடகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து பதில் கூற முடியுமா என்று, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் சவால் விடுத்தார்.

உடுப்பியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த அவர் பேசியது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கர்நாடகத்திற்கு வருகை தருகிறாராம்.

கர்நாடகத்தில் பிரசாரம் செய்யும்போது, பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற அமைச்சர்களின் ஊழல்கள், முறைகேடுகள், எடியூரப்பாவின் ஊழல்கள், மாநிலம் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது, பல்வேறு கட்சிகளாக பாஜக பிரிந்துள்ளது குறித்து நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இந்த கேள்விகளுக்கு நரேந்திர மோடியால் பதில் அளிக்க முடியுமா? கர்நாடகத்தில் 5 ஆண்டு காலம் ஊழல் ஆட்சியை நடத்தி விட்டு, மறுபடியும் மக்களிடம் சென்று ஆட்சி அமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பாஜகவால் எப்படி கேட்க முடிகிறது. பாஜக ஆட்சியால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜகவின் அருமை பெருமைகளைப் பேசி வரும் நரேந்திர மோடி, கர்நாடகத்தில் நடைபெற்ற பாஜக ஆட்சியின் லட்சணங்களை வெளிப்படையாக பேசுவாரா?

நிலையான மற்றும் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே காங்கிரஸ் கட்சியின் லட்சியம். கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அலை வீசுகிறது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 130 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான மற்றும் நிம்மதியான ஆட்சியை வழங்கும். மும்பை மாநகரம் உலக அளவிலான தொழில் மற்றும் வர்த்தக நகரமாக உயர்ந்துள்ளது.

அதேபோல, மங்களூர், உடுப்பி நகரங்களை வளர்க்க முடியும். காங்கிரஸ் ஆட்சி வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.