போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை செலுத்த முயற்சி: சிவதாணு பிள்ளை
சுகோய் போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை செலுத்த முயற்சி
சுகோய் போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரமோஸ் ஏவுகணை திட்ட தலைமைச் செயல் இயக்குநர் சிவதாணு பிள்ளை கூறினார்.
பத்மபூஷண் விருது பெற்ற சிவதாணு பிள்ளை, ஆராய்ச்சியாளர் தமிழ்மணி, ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோருக்கு சேலத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்க வந்த சிவதாணு பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியது: 1990-களில் வளைகுடா போரின்போது, அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய டெமஹாக் ஏவுகணைகள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அவை ஒலியின் வேகத்தைக் காட்டிலும் குறைவான வேகத்தில் பயணிக்கும் சப்சானிக் ஏவுகணைகள்தான். ஆனால், அதைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் பயணிக்கும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் ஆவலே பிரமோஸ் ஏவுகணைகளைத் தோற்றுவித்தன. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சில தொழில்நுட்பங்கள் ரஷியாவிடம் உள்ளன. அதே போல, இந்தியாவிலும் சில வசதிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி பிரமோஸ் தயாரிக்கப்பட்டது. இவற்றை கடற்படை, ராணுவம், விமானப் படைகளில் பயன்படுத்த முடியும்.
Advertisement
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தும் பிரமோûஸ ஏவ முடியும். இதன் தாக்கும் தொலைவு தற்போது சுமார் 300 கிலோ மீட்டராக உள்ளது. பிரமோஸ் ஏவுகணை தயாரிப்புக்கு சுமார் 15 அரசு, தனியார் நிறுவனங்கள் உபகரணங்களைக் கொடுக்கின்றன. இந்த ஏவுகணைத் தயாரிப்பில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களின் உழைப்பு உள்ளது.
எனவே, பிரமோஸ் தயாரிப்புக்காக எனக்கு கிடைத்துள்ள பத்மபூஷண் விருது 20 ஆயிரம் பேருக்குச் சொந்தமானது. பிரமோûஸ போன்று அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை யாருடைய உதவி இல்லாமலும் இந்தியா தயாரிக்க முடியும்.
பிரமோஸ் ஏவுகணையை சுகோய் போர் விமானத்தில் இருந்து ஏவுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் சோனிக் ஏவுகணையைத் தொடர்ந்து, அதைவிட வலிமையான, ஒலியைவிட 7 மடங்கு வேகத்தில் செல்லும் சைபர் சோனிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டுக்குள் அந்த ஏவுகணை தயாரிக்கப்படும்.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 60 கோடி இளைஞர்கள் இருப்பார்கள். அப்போது, உலகின் முதன்மையான நாடாக இந்தியா விளங்கும். நாட்டில் தற்போது ஐஐடி, என்ஐடிக்களில் பயிலும் மாணவர்கள் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.
நாட்டில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது. மின்சாரத்துக்காக எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றையே நம்பியிருக்க முடியாது.
மேலும், அந்த வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும். எனவே, அணு மின்சாரத்தின் தேவை அவசியமாகிறது.
யுரேனியம், தோரியம் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். தற்போது, யுரேனியம் மூலமே தயாரிக்கப்படுகிறது. உலகில் உள்ள தோரியத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. அடுத்தக்கட்டமாக தோரியம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும்.
கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. இந்த விவகாரத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும் என்றார் சிவதாணு பிள்ளை.