முகப்பு
இந்தியா

மிக்-29 கே ரக போர் விமானங்கள் இந்தியக் கடற்படையில் இணைப்பு

மிக்-29 கே ரக போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி சனிக்கிழமை முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்தார்.

Updated On : 12 மே 2013, 12:27 am IST
பகிர்:

மிக்-29 கே ரக போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி சனிக்கிழமை முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்தார்.

கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் ஐ.என்.எஸ். ஹன்சா என்ற இந்தியக் கடற்படைத் தளம் உள்ளது. இது கருஞ்சிறுத்தை படையணி உள்ளிட்ட இந்தியக் கடற்படையின் பல்வேறு போர் விமானப் படையணிகளின் தளமாகும். இந்தப் படைத் தளத்தில் மிக்-29 கே ரக போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி சனிக்கிழமை முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைத்தார். இந்த விழாவில், மிக்-29 கே ரக விமானங்கள் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டன.

அவற்றுக்குத் துணையாக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் சீ ஹாரியர்ஸ் ரக போர் விமானங்களும் பறந்தன.

Advertisement

Advertisement

ஏ.கே.அந்தோனி பேசுகையில், ""மிக்-29 கே விமானங்கள் இணைக்கப்பட்டதால் இந்தியப் பாதுகாப்பு தயார்நிலையும் போர்த் திறனும் மேம்படும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம் தாங்கிக் கப்பல் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி கொச்சியில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது'' என்றார்.

புதிய சகாப்தப் போர் விமானங்கள் என்று அழைக்கப்படும் இவை கடந்த 2010இல் இந்தியக் கடற்படைப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, முறைப்படியான இணைப்புக்கு முந்தைய சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.

இது குறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில், ""மிக்-29 கே ரக போர் விமானங்கள் வலிமை வாய்ந்தவை மட்டுமின்றி, ராணுவத் தளவாடங்கள் போன்ற சரக்குகளையும் ஏற்றிச் செல்லக் கூடியவை. இந்தப் போர் விமானம், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற புதிய போர்க் கப்பலில் நிறுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கடற்படையின் திறன் மேம்படும். ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் இந்த ஆண்டு இறுதிக்குள் கடற்படையில் இணைக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

மிக்-29 கே ரக போர் விமானத்தில், எதிரி விமானங்கள் மற்றும் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய அதிநவீன ஏவுகணைகள், வெடிகுண்டுகள் மற்றும் நவீன கட்டுப்பாட்டு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்தோனி வருத்தம்: கோவா கடற்கரை அருகே கடந்த மாதம் மீன்பிடிப் படகு மீது இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் மோதியதில் 6 மீனவர்கள் இறந்த சம்பவத்துக்கு ஏ.கே.அந்தோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மிக்-29 கே ரக போர் விமானத்தை கடற்படையில் இணைக்கும் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""இந்தச் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. துரதிருஷ்டவசமான இச்சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இறந்த மீனவர்களின் குடும்பத்தாருக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் எடுக்கும். இச்சம்பவம் தொடர்பான விசாரணை முடிவடைந்த பின், சம்பந்தப்பட்ட கடலோரக் காவல்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.