முகப்பு
இந்தியா

அறிவுக்கேற்ப வாழ அனுமதிப்பதுதான் ஹிந்து தர்மத்தின் சிறப்பு: வேளுக்குடி கிருஷ்ணன் பெருமிதம்

""இப்படி இரு, அப்படி இருக்காதே என்று கட்டளைகள் பிறப்பிக்காமல் எதையும் சீர்தூக்கிப் பார்த்து நமது அறிவுக்கேற்ப வாழ அனுமதிப்பதுதான் ஹிந்து தர்மத்தின் சிறப்பு'' என்று ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் தனது உரையில் பேசியுள்ளார்.

Updated On : 2 ஜூன், 2013 at 3:04 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

""இப்படி இரு, அப்படி இருக்காதே என்று கட்டளைகள் பிறப்பிக்காமல் எதையும் சீர்தூக்கிப் பார்த்து நமது அறிவுக்கேற்ப வாழ அனுமதிப்பதுதான் ஹிந்து தர்மத்தின் சிறப்பு'' என்று ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் தனது உரையில் பேசியுள்ளார்.

தில்லி முத்தமிழ்ப் பேரவை, தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து தலைநகரில் மூன்று நாள்கள் நடத்தும் "பக்தி மற்றும் இசை விழா' வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், வேளுக்குடி கிருஷ்ணன் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவில் முக்கிய அம்சம்:

""கலங்கியவர்களுக்காக அளிக்கப்பட்ட உபதேசம்தான் கீதை. கலங்காதவர்கள் என உலகில் யாரும் இல்லை. அதனால் கீதையின் உபதேசம் எல்லோருக்கும் பொருந்தக் கூடியதாகத் திகழ்கிறது. அர்ஜுனன் உறவுப் பாசத்தால் போர் செய்ய மறுத்தான். போர்க்களத்தில் இருந்து ஓடிவிடத் துடித்தான். அவனுக்கு பகவான் கிருஷ்ணன் கர்மம், ஞானம் குறித்தும், ஜீவாத்மா, பரமாத்மா குறித்தும் போதித்ததை பகவத் கீதை 18 அத்தியாயங்களில், 700 ஸ்லோகங்களில் எடுத்துரைக்கிறது.

Advertisement

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட "பகவத் கீதை' தற்போதைய காலத்துக்கு எப்படி பொருந்தும் என கேட்கத் தோன்றும். உலகத்தில் சில விஷயங்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். நாம் கண்ணால் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம். அவை எப்போதும் மாறுவது கிடையாது. அதேபோல் வாழ்க்கையில் சில, அடிப்படையாகவே இருந்து, எப்போதும் மாறாமல் இருக்கின்றன.

"பகவத் கீதை போருக்கு வழிவகுத்தது; அதை ஏன் படிக்க வேண்டும்?' என்று நீங்கள் கேட்கலாம். அந்தக் கேள்வியில் அடிப்படையில்லை. அந்தப் போர் இன்றியமையாதது.

எதற்காக அந்தப் போர் நடத்தப்பட்டது என்பதுதான் முக்கியம். தர்மத்துக்காக நடத்தப்படும் போர் இன்றியமையாதது. ஆனால், அதர்மத்துக்காக நடத்தப்படும் போர் தேவையற்றது.

போரை நடத்த வேண்டிய அவசியம் குறித்து அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணன் பல உபதேசங்களைச் செய்தார். அனைத்தையும் கூறி விட்டு, "அர்ஜுனா, நான் சொல்வதை எல்லாம் சொல்லி விட்டேன், அவற்றையெல்லாம் சீர் தூக்கிப் பார்த்து, உனக்கு எது சரி என படுவதைச் செய்' என்றும் அதே கிருஷ்ணன் கூறுகிறார். இதுதான் ஹிந்து தர்மத்தின் சிறப்பு'' என்றார் வேளுக்குடி கிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.