முகப்பு
இந்தியா

இரட்டை வேடம் போடும் பாஜக

சாமியார் ஆசாராம் பாபு கைது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டினார்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 12:33 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

சாமியார் ஆசாராம் பாபு கைது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டினார்.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை நடத்தி வருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர் மீது 16 வயது இளம்பெண் பாலியல் புகார் கூறினார். இப் புகாருக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதால், காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜோத்பூர் போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். போலீஸார் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அவர் ஆஜராகாததால், இந்தூரில் இருந்த அவரை ஜோத்பூர் போலீஸார் கைது செய்தனர்.

இவரது கைது விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிக்காட்டாமல் பாஜக தலைவர்கள் இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும் அவர் கூறுகையில், நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து, பாஜக கண்டனக் குரல் கொடுத்து வருகிறது. அதே சமயம், பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் யாராவது இத்தகைய புகாரில் சிக்கினால், அதுகுறித்து கருத்துத் தெரிவிக்காமல் அக் கட்சித் தலைவர்கள் மௌனமாகிவிடுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பாஜக தலைவர்களிலேயே அதிகமாக நாடாளுமன்றத்தில் பேசிய பெருமை அக் கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை சேரும். ஆனால், ஆசாராம் பாபு கைது விவகாரத்தில், "சட்டம் தனது கடமையைச் செய்யும்' என்று மிகவும் மென்மையான கருத்தை மட்டும் சுஷ்மா பதிவு செய்துள்ளார்.

2008-ஆம் ஆண்டில் திபேஷ் வகேலா (10), அபிஷேக் வகேலா (11) ஆகிய இரு சிறார்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசாராம் பாபு குருகுலத்தில் படித்து வந்தனர். திடீரென காணாமல்போன இச் சிறுவர்கள், இரு தினங்களுக்குப் பிறகு அருகே இருந்த ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இச் சிறுவர்கள் பூஜையில் பலியிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணைக் கமிஷனை குஜராத் அரசு அமைத்தது. அந்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை மீது நாள் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எடுக்கவில்லை.

பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஆசாராம் பாபுக்கு வெளிப்படையாக பாஜக தலைவர் உமாபாரதி ஆதரவு தெரிவித்தார். ஆனால், இவரைப் போல மற்ற அக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், வலிமையான கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாமல் தங்களது பொறுப்பில் இருந்து நழுவி வருகின்றனர். இதிலிருந்தே இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களின் இரட்டை நிலைப்பாடு தெள்ளத் தெளிவாகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.