முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் நீதி குழுவின் வருகை தள்ளிவைப்பு

பாகிஸ்தான் நீதி குழுவின் இந்திய வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

Updated On : 11 செப்டம்பர் 2013, 11:04 pm IST
பகிர்:

பாகிஸ்தான் நீதி குழுவின் இந்திய வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கவரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். ஏனைய பயங்கவரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அஜ்மல் கசாப் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மும்பை தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

இந்த விசாரணைக்கு உதவும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச்சில் பாகிஸ்தான் நீதி குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையை அந் நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதற்கு, மும்பை தாக்குதல் விசாரணையில் சாட்சியம் அளித்தவர்களிடம் பாகிஸ்தான் நீதி குழு குறுக்கு விசாரணை நடத்தவில்லை என அந் நாட்டு நீதிமன்றம் காரணம் கூறியது. இந் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் பாகிஸ்தான் நீதி குழுவை இந்தியாவில் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தக் குழு கடந்த 7-ம் தேதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

அன்றைய தினம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை நடைபெறுவதால், வரும் 19-ம் தேதிக்குப் பிறகு, நீதி விசாரணைக் குழுவினர் வருமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.

இதுகுறித்து தில்லியில் அவர் மேலும் கூறியது: மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய சாட்சிகளான பயங்கரவாதி அஜ்மல் காசப் வாக்குமூலத்தை பதிவு செய்த மாஜிஸ்திரேட் ராமா விஜய் சாவந்த் வாகுலே, முதன்மை விசாரணை அதிகாரி ரமேஷ் மகாலே, தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 9 பயங்கரவாதிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த இரு மருத்துவர்கள் ஆகியோரை பாகிஸ்தான் நீதி குழு விசாரணை செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.