உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற உதவுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க பாஜக மனு
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கு உதவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் அந்த மாநில பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கு உதவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் அந்த மாநில பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மே மாதம் 1, 3, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 9-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலை சீர்குலைக்கும் விதமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதற்கு உதவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வேட்புமனு தாக்கல் முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல், ஆளும் கட்சியினர் தடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறவேண்டுமெனில், கண்காணிப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உறுதியளித்தனர்.
ஜனநாயகத்துக்கு முட்டுக்கட்டை: இதனிடேயே, மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முயலுவதாக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ குற்றம் சாட்டினார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் நடத்தாமலேயே ஆளும் திரிணமூல் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தனது தொண்டர்களிடம் கூறியுள்ளார்.
எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் ஆளும் கட்சியினர் தடுக்கிறார்கள். மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முயல்கிறது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.