அயோத்தி விவகாரம்: முஸ்லிம்களுக்கு பாபர் மசூதி நடவடிக்கைக் குழு வலியுறுத்தல்
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் மீண்டும் விசாரிக்கப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக எந்தவொரு கருத்துகளுக்கும் முஸ்லிம்கள் எதிர்வினை
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் மீண்டும் விசாரிக்கப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக எந்தவொரு கருத்துகளுக்கும் முஸ்லிம்கள் எதிர்வினை ஆற்றக் கூடாது என்று பாபர் மசூதி நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி நடவடிக்கைக் குழு (பிஎம்ஏசி) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து பிஎம்ஏசி ஒருங்கிணைப்பாளர் ஷஃபர்யப் ஜிலானி கூறுகையில், பாபர் மசூதி நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அயோத்தி தொடர்பான வழக்கு விவகாரம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்றார்.
அயோத்தி விவகாரத்தில் நூறாண்டுகளாக சர்ச்சை இருந்து வருவதாகவும், அதற்கு முக்கியத்துவம் அளித்து அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை உத்தரப் பிரதேச அரசு நிராகரித்தது.
அத்துடன், ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், ராமர் கோயில் கட்டுவதற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சில அமைப்புகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அயோத்தி விவகாரம் தொடர்பான பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த விவகாரத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு அலாகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப் பகுதியை உரிமை கொண்டாடி வரும் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் அந்த நிலப் பகுதியை சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.