முகப்பு
இந்தியா

கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2018, 1:22 am IST
பகிர்:

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் ஆகியவை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியன தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வர அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் ஏ.எம். சிங்வி மூலம் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.எம். சிங்வி ஆஜராகி வாதிடுகையில், தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல கார்த்தி சிதம்பரம் திட்டமிட்டுள்ளார்; ஆதலால் சில நிபந்தனைகளுடன் வெளிநாடுகளுக்கு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்றார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தால் முன்பு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும்' என்றார்.
இதைக்கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறியதாவது:
வெளிநாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. எனினும், இதேபோன்ற வழக்கில் முன்பு கார்த்தி சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து, நாட்டுக்கு திரும்பியதும், தனது கடவுச்சீட்டை அமலாக்கத் துறையிடம் கார்த்தி சிதம்பரம் ஒப்படைக்க வேண்டும்.
தனது விமான பயணம் தொடர்பான தகவலையும், இந்தியாவுக்கு திரும்பி வரும் நாள் குறித்த தகவலையும் உச்ச நீதிமன்றத்திடம் கார்த்தி சிதம்பரம் தெரியப்படுத்த வேண்டும் என்றனர்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரம் இதற்கு முன்பு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு எதையும் அவர் தொடங்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments