மக்களவை தேர்தலில் காங்கிரஸுடன் எங்கும் கூட்டணி கிடையாது: மார்க்சிஸ்ட்
மக்களவை தேர்தலையொட்டி, நாட்டின் எந்தப் பகுதியிலும் காங்கிரஸுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்காது என
மக்களவை தேர்தலையொட்டி, நாட்டின் எந்தப் பகுதியிலும் காங்கிரஸுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினரும் கேரள மாநில செயலாளருமான கொடியேறி பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டுகளாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வீழ்த்தி, முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு இணையாக தற்போது பாஜக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதன் காரணமாக கம்யூனிஸ்ட் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் அக்கட்சி தனது பலத்தை வெகுவாக இழந்து வருகிறது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில், பாஜகவையும், திரிணமூல் காங்கிரஸையும் வீழ்த்த மேற்கு வங்கத்தில் காங்கிரஸுயுடன் கூட்டணி அமைத்து போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்து, தற்போது தொகுதிப்பங்கீடு தொடர்பாக இருகட்சியின் தலைவர்கள் மத்தியில் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கூட்டணி குறித்து கேரளத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்காக நாட்டின் எந்தப்பகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார்.
சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும்போது, கம்யூனிஸ்ட், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வது என்பதை அந்தந்த மாநிலங்களில் நிலவி வரும் பிரச்னைகளின் அடிப்படையில் முடிவு செய்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாட்டின் எந்தப்பகுதியிலும் காங்கிரஸுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்காது என கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியிருப்பது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.