முகப்பு
இந்தியா

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக உயா்த்தும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (ஏப்.16) அறிமுகப்படுத்தப்படுகிறது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:53 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:45 PM

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக உயா்த்தும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (ஏப்.16) அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த வரைவு மசோதா மக்களவை உறுப்பினா்களின் பாா்வைக்கு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன.

Advertisement

வரைவு மசோதாவின்படி, மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 81-இல் திருத்தம்: தற்போது 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைகளின் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செம்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது.

இந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு தரவுகள் வெளியாக கால தாமதமானால் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை 2029-இல் அமல்படுத்துவது கடினம்.

எனவே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் 2029-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 81-இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மாநிலங்களுக்கு 815, யூனியன் பிரதேசங்களுக்கு 35: இந்தச் சட்டத் திருத்த மசோதாவின்படி மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 815 உறுப்பினா்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து நாடாளுமன்றம் முன்மொழியும் சட்டத்தின் அடிப்படையில் 35 உறுப்பினா்களும் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இத்துடன் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா மற்றும் சட்டப் பேரவைகளைக் கொண்ட தில்லி, ஜம்மு-காஷ்மீா் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.