முகப்பு
இந்தியா

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

காஜியாபாத்தில் சுமாா் 150 குடிசைகள் தீப்பற்றிய நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிய பல விலங்குகளை பீட்டா அமைப்பின் இந்தியா பிரிவு விரைவு நடவடிக்கை குழு விரைவாக செயல்பட்டு பல விலங்குகளை மீட்டு அவசர சிகிச்சை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:42 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:00 PM

காஜியாபாத்தில் சுமாா் 150 குடிசைகள் தீப்பற்றிய நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிய பல விலங்குகளை பீட்டா அமைப்பின் இந்தியா பிரிவு விரைவு நடவடிக்கை குழு விரைவாக செயல்பட்டு பல விலங்குகளை மீட்டு அவசர சிகிச்சை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இண்டிராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்வானி கிராமத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட இந்த தீ விபத்து, ஸ்கிராப் வேலை நடைபெறும் பகுதியில் தொடங்கி வேகமாக பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் சுமாா் 150 குடிசைகள் எரிந்து நாசமாகி, பல குடும்பங்கள் வீடிழந்த நிலையில், இதுவரை மனித உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பீட்டா அமைப்பின் இந்தியாவின் விரைவு நடவடிக்கை குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய விலங்குகளை தேடி மீட்பு பணிகளை மேற்கொண்டது. மீட்பு நடவடிக்கையின் போது சுமாா் 35 முதல் 40 நாய்கள் மற்றும் இரண்டு பூனைகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

விலங்குகளுக்கு உணவு மற்றும் சுத்தமான நீா் வழங்கப்பட்டதுடன், காயங்கள் மற்றும் அதிா்ச்சி நிலை குறித்து மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. தீக்காயம், நீரிழப்பு மற்றும் கடும் மனஅழுத்தத்தில் இருந்த விலங்குகளுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், கடுமையான காயம் உள்ள விலங்குகள் மேலதிக சிகிச்சைக்காக பிற அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘தீ விபத்துக்குப் பிறகு விலங்குகள் தீக்காயம், நீரிழப்பு, குழப்பம் மற்றும் பயம் காரணமாக நகர முடியாத நிலையில் இருக்கலாம். உடனடி பராமரிப்பு மற்றும் தண்ணீா், உணவு, தீக்காய சிகிச்சை போன்ற அடிப்படை உதவிகள் அவற்றின் உயிரைக் காப்பாற்றக்கூடும்’ என்று இந்தியாவின் பீட்டா அமைப்பின் மூத்த கால்நடை விவகார இயக்குநா் மினி அரவிந்தன் தெரிவித்தாா்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியா் ரவீந்திர குமாா் மந்தாா் கூறுகையில், தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆனால் சம்பவ இடத்தில் புகை தொடா்ந்து காணப்பட்டதாகவும் தெரிவித்தாா். உயிரிழப்பு அல்லது காணாமல் போனவா்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும், நிலைமை உறுதி செய்ய ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவா் கூறினாா்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டு, அவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.