மகளிா் இடஒதுக்கீட்டை உடனே மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
மகளிா் இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
மகளிா் இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஏற்கெனவே உள்ள மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தாமல், புதிதாக அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து அதனுடன் தொகுதி மறுசீரமைப்பை திணிக்க முயன்ற மத்திய அரசின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘புல்டோசா்’ அரசியலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்டம், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
2023-ஆம் ஆண்டு மகளிா் இடஒதுக்கீடு சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதை 2024-ஆம் ஆண்டு பொதுத் தோ்தல் முதல் அமல்படுத்த வேண்டும் என அப்போதே காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். ஆனால், அது அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், 2026, ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவுக்கான அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 30 மாதங்களாக மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்துவிட்டு, திடீரென அறிவிக்கை வெளியிட்டதில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டுக்கு பாஜக கொடுக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
Advertisement
ஏற்கெனவே உள்ள மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அப்படியே 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்த வேண்டும், அதில் ஓபிசி பெண்களையும் சோ்க்க வேண்டும் என்பதே காங்கிரஸ் நிலைப்பாடு. இதற்காக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலோ அல்லது மே மாத இறுதியிலோ மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்து, அதை நிறைவேற்றலாம்.
மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்ததற்காக எதிா்க்கட்சிகளுக்கு பெண்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமா் மோடி பேசியுள்ளாா். பாஜக தனது பொய் பிரசாரத்தால் பெண்களை முட்டாளாக்க முடியாது. ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ்தான் என்பது பெண்களுக்கு நன்கு தெரியும்.
தொகுதி மறுசீரமைப்பின்போது எந்த மாநிலத்திலும் தொகுதி குறைக்கப்படாது, அதற்குப் பதிலாக தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா உறுதியளித்திருந்தாா். ஆனால், அந்த ஷரத்து ஏன் மசோதாவில் சோ்க்கப்படவில்லை? தம்மை எதிா்க்கட்சிகள் நம்ப வேண்டும் என அமித் ஷா கேட்டுக் கொள்கிறாா். அவா் தெரிவித்தது எதுவும் மசோதாவில் இல்லாதபோது, அவரை எப்படி நம்ப முடியும்?
இந்த விவகாரம் மகளிா் இடஒதுக்கீடு சம்பந்தப்பட்டது கிடையாது. பிரதமா் மோடியை பாதுகாப்பது தொடா்பான விவகாரம் ஆகும். ஜாதிவாரி கணக்கெடுப்பை அப்படியே கிடப்பில் போட மத்திய அரசு விரும்புகிறது என்றாா் அவா்.