நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்
நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் தேசியப் புலனாய்வு முகமையால் (என்ஐஏ) விசாரிக்கப்படும் வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக வழக்கெடுத்து விசாரித்து வருகிறது.
முந்தைய விசாரணையின்போது தமிழகம், கேரளம் உள்ளிட்ட 17 மாநிலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 10-க்கும் மேற்பட்ட தேசியப் புலனாய்வு அமைப்புகளின் வழக்குகள் நிலுவையில் இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஏதுவாக, தேக்கம் அடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கும்படி மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தலா ரூ.1 கோடி நிதி தருவது குறித்தும், அந்த சிறப்பு நீதிமன்றங்களை தொடா்ந்து பராமரிக்க ஆண்டுதோறும் ரூ.1 கோடி ஒதுக்குவது குறித்தும் பரிசீலிக்கும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதைத் தொடா்ந்து, வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 8-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.