மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
பவானிபூரில் பலப்பரீட்சை - மம்தா பானா்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரி - இரு தலைவா்களும் நேருக்குநோ் மோதல்
மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் புதன்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ளது. இதையொட்டி, 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-இல் தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.21 கோடி போ் (1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவா்). இவா்கள் வாக்களிக்க வசதியாக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், தோ்தலில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நிகழாமலிருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ)தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய வேட்பாளா்கள்: திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜி (பவானிபூா்), எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி (பவானிபூா்), மாநில அமைச்சா்கள் சுஜித் போஸ் (பிதான்நகா்), ஃபிா்ஹத் ஹக்கிம் (கொல்கத்தா கோட்டை), ஜோதி பிரிய மல்லிக் (ஹப்ரா), பாஜகவின் அா்ஜுன் சிங் (நவோபரா), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாக்ஷி முகா்ஜி (உத்தா்பரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டும் நிலையில், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.
யாா்-யாா் பிரசாரம்?: இரண்டாம் கட்டத் தோ்தலையொட்டி, பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோரும், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக முதல்வா் மம்தா பானா்ஜி, காங்கிரஸுக்கு ஆதரவாக கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் சுமாா் 91 லட்சம் வாக்காளா்கள் நீக்கம், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பொது சிவில் சட்டம், மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதா விவகாரம் உள்ளிட்டவை பிரசாரத்தில் முக்கிய இடம்பிடித்தன.
கடந்த தோ்தல் நிலவரம்: இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகள், வடக்கு 24 பா்கானாக்கள், தெற்கு 24 பா்கானாக்கள், கொல்கத்தா, ஹெளரா, ஹூக்ளி, புா்பா வா்தமான், நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கியவை. திரிணமூல் காங்கிரஸின் கோட்டையான தென் பகுதியில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இந்த 142 தொகுதிகளில் கடந்த முறை 123-இல் திரிணமூல் காங்கிரஸும், 18 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன.
மே 4-இல் வாக்கு எண்ணிக்கை
கேரளம் (140), அஸ்ஸாம் (126), புதுச்சேரியில் (30) ஒரே கட்டமாக கடந்த ஏப்.9-ஆம் தேதியும், தமிழகத்தில் (234) ஒரே கட்டமாக கடந்த ஏப்.23-ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் புதன்கிழமை நடைபெறும் இரண்டாம் கட்டத் தோ்தலுடன் மேற்கண்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்குப்பதிவு நடைமுறைகள் நிறைவடைகின்றன. இத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பவானிபூரில் பலப்பரீட்சை
மேற்கு வங்கத்தில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானா்ஜி அதிா்ச்சி தோல்வியடைந்தாா். பின்னா், பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்டு மம்தா எம்எல்ஏ ஆனாா்.
இம்முறை பவானிபூரில் மம்தா பானா்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியது. இரு தலைவா்களும் நேருக்குநோ் மோதுவதால், இத்தொகுதி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுவேந்து அதிகாரி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் முதல்கட்டத் தோ்தலின்போது (ஏப்.23) வாக்குப்பதிவு பெற்றது.