முகப்பு
இந்தியா

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் வாக்காளர் பலியானது குறித்து...

Updated On : 29 ஏப்ரல் 2026, 10:04 pm IST
அபிஷேக் பானர்ஜி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் வாக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

''அமித் ஷா தலைமையிலான மத்திய பாதுகாப்புப் படையினர் தனியார் ராணுவமாகச் செயல்பட்டு வருகின்றனர். உரிமம் பெற்ற குண்டர்கள் குழு ஒன்று மேற்கு வங்க மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Advertisement

Advertisement

உதயநாராயண்பூர் தொகுதியில் தனது மகனுடன் முதியவர் ஒருவர் வாக்களிக்கச் சென்றுள்ளார். அவரால் நடக்க முடியாது என்பதால், அவரின் மகன் அவருக்கு உதவியுள்ளார். ஆனால் மத்திய பாதுகாப்புப் படையினர் மகனை முட்டித் தள்ளியுள்ளனர். முதியவரும் கீழே விழுந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாதுகாப்புப் படையினர் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. பெண்களை அறைகின்றனர். முதியவர்களை தாக்குகின்றனர். குழந்தைகளிடம் கூட வன்முறை காட்டுகின்றனர். இரக்கமற்ற வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2021-ல், அப்பாவி மக்களின் இரத்தத்திற்காக பாஜக பெரும் விலை கொடுத்தது. 2026-இல், அவர்கள் இன்னும் பெரும் விலையைக் கொடுப்பார்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று (ஏப். 29) காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 91% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.