சொகுசு கார் விபத்து 
இந்தியா

தூங்கச் சென்ற மகன் எங்கே? உடல்களை அடையாளம் காட்ட அழைத்தபோது அதிர்ந்த பெற்றோர்!

தூங்கச் சென்ற மகன் எங்கே என்று, உடல்களை அடையாளம் காட்ட காவல்துறை அழைத்தபோது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூர்: பெங்களூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேகமாக வந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பலியான நிலையில், சொகுசு காரில் வந்த 6 சிறுவர்களைப் பற்றிய தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் டொப்பாஸ்பெட் - ஹோஸ்கோட் நகர வட்டச் சாலையில் இரண்டு சொகுசு கார்கள், டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒன்று மீது ஒன்று அடுத்தடுத்து மோதியதில் சொகுசு காரில் வந்த 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 5.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், தேர்வுகள் நெருங்குவதால், தங்கள் பிள்ளைகள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்திருந்த பெற்றோருக்கு, காவல்துறையிடமிருந்து உங்கள் பிள்ளைகளின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள் என்று அழைப்பு வந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

வீட்டில் உள்ள அறையில் உறங்கச் சென்ற மகனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று தெரியாமல், அறைக்குச் சென்றுபார்த்தால், படுக்கை காலியாக இருந்தபோதுதான், தங்களுக்குத் தெரியாமல் பிள்ளைகள் வெளியே சென்று விபத்தில் சிக்கியதே பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது.

ஹோஸ்கோடேவில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு தனியார் மருத்துவமனையில் பெற்றோர்கள் நின்றிருக்கிறார்கள். ஒரு சிறுவனின் பெற்றோர் கூறுகையில், வெளியே செல்லக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டோம். நள்ளிரவிலும் அறைக்குச் சென்று கண்காணித்துக் கொண்டேதான் இருந்தோம். ஆனால், அதிகாலையில் எழுந்து பார்த்தால் மகனைக் காணவில்லை. வந்துவிடுவான் என்றுதான் எண்ணியிருந்தோம். காவல்துறை அழைப்புதான் வந்தது என்கிறார்.

மகனுடன் பகல் முழுக்க ஒன்றாக அமர்ந்து படித்து முடித்துவிட்டு இருவரும் உறங்கச் சென்றோம். காலையில் படுக்கையில் இல்லை என்று கதறி அழுகிறார் ஒரு தாய்.

அயன் என்ற சிறுவனின் தந்தையுடையதுதான் விபத்தில் சிக்கிய கார். இது ஆறு மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அது முதலே, அயன் காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

காலையில் எழுந்து படுக்கையில் பிள்ளைகள் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிள்ளைகளுக்கு போன் செய்ய, அவர்கள் பத்து நிமிடத்தில் வருவதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், யாருமே வரவில்லை. இவர்கள்தான் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். பிள்ளைகளின் உடல்களை அடையாளம் காட்டிப் பெற்றுச் செல்ல என்கிறார்கள் காவல்துறையினர்.

விபத்து நடந்தது எப்படி?

ஹோஸ்கோடேவிலிருந்து தேவனஹல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது வேகமாக வந்த சொகுசு கார் மோதியிருக்கிறது. முதலில் மோட்டார் சைக்கிள் மீது மோதி பிறகு டிரக் மீது மோதியிருக்கிறது.

கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு, மோட்டார் சைக்கிளில் வந்த 26 வயது ககன் என்பவர் மரணமடைந்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், இரவுப் பணி முடிந்து வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலியானார். சொகுசு காரில் வந்த ஆறு பேரும் கல்லூரி மாணவர்கள் என்றும், பொழுதுபோக்குக்காக காரில் வந்த போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொகுசு கார், எந்த விதமான வாகனம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருகுலைந்து நிற்கிறது.

கார் மோதிய வேகத்தில் டிரக்கின் பின்பக்க டயர் தனியாக உடைந்து அடுத்தப் பக்கத்தில் இருந்த சாலையில் விழுந்துள்ளது. இந்த டயர் மோதியதில், மற்றொரு கார் ஒன்றும் விபத்தில் சிக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ கபிலேஸ்வரா் கோயிலில் பிப். 15-இல் மகா சிவராத்திரி உற்சவம்

8 வருவாய் மாவட்டங்கள், 47 தொகுதிகளுக்கான மண்டல மாநாடு: முதல்வா் பங்கேற்பு

வாணியம்பாடி அருகே ரூ. 1.18 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

பெண்களுக்கு மகளிா் உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியதை திமுகவினா் கொண்டாடினா்

SCROLL FOR NEXT