முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய ஏழு பேர் தில்லியில் கைது: ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய ஏழு பேரை தில்லியில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 17 ஜூன் 2026, 4:48 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நமது நிருபர்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய ஏழு பேரை தில்லியில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, தில்லி மற்றும் தேசிய தலைநகர வலய (என்சிஆர்) பகுதியில் இயங்கி வந்த இந்த கும்பலின் செயல்பாடு முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை பாகிஸ்தானிலிருந்து கடத்தியதாகவும், இந்தியாவில் தாக்குதலுக்கு இலக்குவைத்த பகுதிகளை நோட்டமிட்டு அவற்றின் புகைப்படங்களை எல்லைக்கு அப்பால் உள்ள குழுவுடன் பகிர்ந்ததாக காவல் துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது:

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு குற்றக் கும்பல் தலைவனாக இருந்து பயங்கரவாதியாக மாறிய ஷாஸôத் பாட்டீ, அவரது கூட்டாளி அஜ்மல் குஜ்ஜார் ஆகியோருக்காக இந்த ஏழு பேரும் பணியாற்றி வந்தனர். அத்துடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஆதரவுடன் ஷாஸôத், அஜ்மல் செயல்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் கடத்தப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருள்களை பஞ்சாபில் பெற்றதும், அவற்றை தில்லி-என்சிஆர் பகுதிக்கு விநியோகிக்கும் வேலையில் கைதான ஏழு பேரும் ஈடுபட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் அனஸ் (எ) அனஸ் தியாகி (26), மோஹித் (எ) யோகி (26), தீபக் (எ) தீபக் அக்ரோலா (38), ஆரிஃப் (எ) பிரதான் (30), கரண்வீர் சிங் (26), ஜதன் (29) மற்றும் சாபிர் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆயுதச் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் தொடர்பான குற்றச்செயல்களில் தொடர்பு உள்ளது.

கைது நடவடிக்கையின் போது, அவர்களுடைய இடங்களில் இருந்து ஐந்து அதிநவீன கைத்துப்பாக்கிகள், 41 தோட்டாக்கள், பட்டீ மற்றும் குஜ்ஜாருடன் தொடர்புடையதாக அறியப்படும் உரையாடல்கள் மற்றும் குரல் பதிவுகள் அடங்கிய ஏழு கைப்பேசிகள், கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களின் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல வங்கிக் கணக்குகளின் விவரங்களும் கண்டறியப்பட்டது.

தில்லி காவல் துறைக்கு கிடைத்த ரகசிய உளவுத்தகவல் அடிப்படையில் தில்லி யமுனா விஹாரில் உள்ள பாகீரத் நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டனர். பயங்கரவாத பாதைக்கு எளிதாக இலக்காகக் கூடிய இளைஞர்களை அடையாளம் கண்டு தங்களுடன் இணைத்து கொள்ளும் பணியில் இந்தக் கும்பல் ஈடுபட்டது. இதற்காக சமூக ஊடக தளங்களை பயன்படுத்தினர்.

காவல் துறையிடன் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் எளிதில் இடைமறிக்க முடியாத கைப்பேசி செயலிகள், அநாமதேய சமூக ஊடகக் கணக்குகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கைப்பேசி எண்கள், ஹவாலா வழிகளில் பணம் பெறுதல் போன்றவற்றில் இந்தக் குழு நுணுக்கமாக செயல்பட்டு வந்தது.

இதில் மோஹித், ஆரிஃப், அனாஸ் மற்றும் தலைமறைவாக உள்ள ஒருவர் ஆரம்பத்தில் வட்டிக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், கடன் வாங்குபவர்களை அச்சுறுத்த சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் அதிநவீன ஆயுதங்கள் குறித்துத் தேடும்போது அஜ்மல் குஜ்ஜாரின் தொடர்பு இவர்களுக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் நபர்களுடன் தொடர்புடைய பல கணக்குகள் மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குஜ்ஜாரிடமிருந்து ஆரிஃப் ரூ.1 லட்சத்துக்கு ஒரு கைத்துப்பாக்கியை வாங்கினார். அத்துடன், பஞ்சாபிலிருந்து தில்லி-என்சிஆர் பகுதிக்கு ஹெராயின் மற்றும் பிற போதைப் பொருள்களை கடத்தும் செயலில் இக்குழுவினர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தில்லி சிறையில் உள்ள குற்றக் குழு தலைவன் தீபக் அக்ரோலா, அனஸ் மூலமாக குஜ்ஜருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பிறகு, சிறைக்கு வெளியே செயல்படும் அவரது கூட்டாளிகள் சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்க உதவினர். இந்த ஏழு பேருடன் தொடர்புடைய நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.