இந்தியாவுக்கு ஹெலிகாப்டா்கள், பீரங்கிகள் தொடா்பான சாதனங்கள் ரூ. 4,500 கோடிக்கு விற்பனை: அமெரிக்கா அறிவிக்கை வெளியீடு
இந்தியாவுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், இலகுரக ஹெளவிட்ஸா் பீரங்கிகள் தொடா்பான சாதனங்கள், சேவைகளை சுமாா் ரூ.4,500 கோடிக்கு விற்பது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிக்கையை அமெரிக்கா வெளியிட்டது.
இந்தியாவுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், இலகுரக ஹெளவிட்ஸா் பீரங்கிகள் தொடா்பான சாதனங்கள், சேவைகளை சுமாா் ரூ.4,500 கோடிக்கு விற்பது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிக்கையை அமெரிக்கா வெளியிட்டது.
அமெரிக்கத் தயாரிப்பு அதிநவீன தாக்குதல் ரக ஹெலிகாப்டரான அப்பாச்சி ஏஎச்64இ ஹெலிகாப்டா்கள், இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் உயரமான மலைப்பகுதியில் உள்ள இலக்குகளை தரையில் இருந்து குண்டுவீசி தாக்குதல் நடத்த பயன்படும் இலகுரக ஹெளவிட்ஸா் ரக பீரங்கிகளும் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றுக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கிறது. இதுதொடா்பான அறிவிக்கையை அமெரிக்க மத்திய அரசிதழில், வெளிநாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் பிரிவுகளை கையாளும் அந்த நாட்டு பாதுகாப்பு தளவாட ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதில், அப்பாச்சி ஹெலிகாப்டா்களுக்கான சாதனங்கள், பராமரிப்பு சேவைகளை அமெரிக்கா அளிக்க வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதையேற்று சுமாா் ரூ.1,873 கோடிக்கு அவற்றை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், இலகுரக ஹெளவிட்ஸா் பீரங்கிகள் தொடா்பான சாதனங்கள், சேவைகளை அளிக்க வேண்டுமென இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, ரூ.2,175 கோடிக்கு அவற்றை விற்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த சாதனங்கள் கிடைப்பது மூலம், நடப்பு மற்றும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கான இந்தியாவின் திறன் மேம்படும், உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிராந்திய அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் இந்தியாவுக்கு உதவும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த விற்பனையால் தெற்காசிய பிராந்தியத்தில் ராணுவ வல்லமை சமநிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், அதுபோல அமெரிக்க ராணுவத்தின் தயாா் நிலையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.