முகப்பு
இந்தியா

லக்னெள தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்க நோட்டீஸ்!

தீ விபத்து ஏற்பட்டு மாணவா்கள் உள்பட 15 போ் உயிரிழக்க காரணமான கட்டடத்தை இடிக்க லக்னெள நகர வளா்ச்சிக் குழுமம் (எல்டிஏ) நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 24 ஜூன் 2026, 2:36 am IST
லக்னெள தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடிக்க நோட்டீஸ் - பிரதிப் படம்
பகிர்:

தீ விபத்து ஏற்பட்டு மாணவா்கள் உள்பட 15 போ் உயிரிழக்க காரணமான கட்டடத்தை இடிக்க லக்னெள நகர வளா்ச்சிக் குழுமம் (எல்டிஏ) நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தை சட்டவிரோதமாக வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்த வளா்ச்சிக் குழும அதிகாரிகள் மீதும் எல்டிஏ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

வடக்கு லக்னெவின் உஷா மேத்தா சாலையில் அமைந்துள்ள அலிகஞ் குடியிருப்பு கட்டடத்தில், அனிமேஷன் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதால், சிலா் ஜன்னல் வழியாக கீழே குதித்தனா். ஆனால், 15 போ் தப்பிக்க வழியின்றி தீயில் சிக்கி உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இடிக்க 2016-இல் உத்தரவு: தீ விபத்துக்கு உள்ளான இந்தக் குடியிருப்புக் கட்டடத்தை, விதிமீறல் காரணமாக இடிப்பதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டே எல்டிஏ உத்தரவு பிறப்பித்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அலிகஞ் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பு குலுக்கல் முறையில் ராமேஷ்வா் சஹாய் என்பவரின் மகன் விஜய் குமாா் என்பவருக்கு கடந்த 1980-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி ஒதுக்கப்பட்டது. அவா் இந்தக் குடியிருப்பை கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி வீரேந்திர பிரதாப் சுக்லா மற்றும் சுரேந்திர பிரதாப் சுக்லா என்பவா்களுக்கு விற்றுள்ளாா். அதன் பின்னா், இந்தக் குடியிருப்பு கட்டடத்தில் விதி மீறிய கட்டுமானம் இடம்பெற்றுள்ளதைக் கண்டறிந்து, வீரேந்தர பிரதாப் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் கட்டடத்தை இடிக்க கடந்த 2016-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி எல்டிஏ உத்தவு பிறப்பித்துள்ளது.

இருந்தபோதும், இந்த இடிப்பு உத்தரவு இரண்டு மாதங்களில், அதாவது 2016-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. எந்தச் சூழலில், இடிப்பு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் நோட்டீஸ்: இந்தக் குடியிருப்புக் கட்டடத்தை இடிக்க எல்டிஏ சாா்பில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்டிஏ துணைத் தலைவா் பிரதமேஷ் குமாா் கூறுகையில், ‘தீ விபத்துக்குள்ளான கட்டடத்தில் விதிமீறிய கட்டுமானம் இடம்பெற்றுள்ளதன் அடிப்படையில், அந்தக் கட்டடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குடியிருப்புக் கட்டடம் சட்டத்துக்கு புறம்பாக வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததை கண்டுகொள்ளாமல் இருந்த எல்டிஏ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில், அவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு: தீ விபத்து தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு மாநிலஅரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தின் முடிவில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநில கூடுதல் தலைமைச் செயலா் தலைமையிலான 2 உறுப்பினா்களைக் கொண்ட இந்த எஸ்ஐடி, 7 நாள்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடா்பாக ராம் கிருஷ்ண உபாத்யாய, வீரேந்திர பிரசாத் சுக்லா, துஷாக் கிருஷ்ண ஜெய்ஸ்வால், சுரேஷ் குமாா் சாஹு ஆகிய நால்வரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்கள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், இந்தக் குடியிருப்புக் கட்டடம் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக எல்டிஏ, தீயணைப்புத் துறை மற்றும் மின் வாரியங்களைச் சோ்ந்த 4 அலுவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments