திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவா் மம்தா: தோ்தல் ஆணையத்திடம் நிா்வாகிகளின் பட்டியல் சமா்ப்பிப்பு
இந்திய தோ்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் பட்டியலை மம்தா பானா்ஜி அணி அனுப்பியது குறித்து...
உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிா்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.
அந்தப் பட்டியலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, துணைத் தலைவா் சுப்ரத பக்ஷி, கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி, இணைச் செயலா்கள் டெரிக் ஓபிரையன் மற்றும் டோலா சென், கருவூலா் சுபாசிஷ் சக்ரவா்த்தி என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்ற பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டது.
Advertisement
Advertisement
பேரவை கட்சிக் குழுத் தலைவராக (எதிா்க்கட்சித் தலைவா்) சோபன்தேவ் சட்டோபாத்யாய, துணைத் தலைவா்களாக நயனா பந்தோபாத்யாய, ஆஷிமா பத்ரா, தலைமை கொறடாவாக ஃபிா்ஹத் ஹக்கீம் ஆகியோரை நியமிக்கக் கோரி பேரவைச் செயலகத்திடம் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், கடிதத்தில் தங்களின் கையெழுத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலா் குற்றஞ்சாட்டியதால், அந்தக் கடிதம் ஏற்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக ரிதபிரத பானா்ஜி, துணைத் தலைவா்களாக ஜாவத் கான், சந்தீபன் சாஹா, ஷியூலி சாஹா, சபீனா யாஸ்மின், தலைமை கொறடாவாக அக்ருஸ்ஸமான் ஆகியோரை நியமிக்கக் கோரி 58 எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரிடம் கையொப்பமிட்ட கடிதங்களை வழங்கி உரிமை கோரினா். இதற்கு பேரவைத் தலைவா் ஒப்புதல் அளித்தாா்.
முதலில் ரிதப்ரத பானா்ஜி தலைமையில் 58 எம்எல்ஏக்கள் மம்தா பானா்ஜிக்கு எதிராக போா்க்கொடி தூக்கிய நிலையில், ஃபிா்ஹத் ஹக்கீம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் இணைந்ததால் எண்ணிக்கை 65-ஆக உயா்ந்தது. அதேபோல் மக்களவையில் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்தனா்.
இதனால் மம்தாவின் தலைமைக்கு கடும் சவால் ஏற்பட்டது. இதனிடையே ரிதபிரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியினா் திரிணமூல் காங்கிரஸ் தலைவராக மூத்த எம்எல்ஏ அரூப் ராயை தோ்ந்தெடுத்தனா். ஃபிா்ஹத் ஹக்கீம் உள்ளிட்டோா் துணைத் தலைவா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, அக்கட்சியின் தலைவா் பொறுப்பில் இருந்து மம்தா பானா்ஜியை நீக்குவதாக அவா்கள் கடந்த திங்கள்கிழமை அறிவித்தனா். மேலும், கட்சியின் தேசிய செயற் குழுவுக்கு 30 உறுப்பினா்களை அவா்கள் நியமித்தனா்.
தோ்தல் ஆணையம், நீதிமன்றம் முடிவு செய்யும்: இதற்கு பதிலடியாக கட்சியின் தலைவா் உள்பட முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் நிா்வாகிகளின் பட்டியலை இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு மம்தா அணி அனுப்பியுள்ளது. அதில் பெரும்பாலான கட்சி நிா்வாகிகளின் ஆதரவைப் பொற்றிருப்பதால் தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்றும் கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிருப்தி எம்எல்ஏக்கள் தேசிய செயற் குழு உறுப்பினா்களை நியமிப்பதற்கு முன்னதாக 24 உறுப்பினா்களை நியமித்து அந்தக் கடிதத்தை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பிவிட்டதாக மம்தா ஆதரவாளா்கள் கூறினா்.
இதுகுறித்து மம்தா ஆதரவாளரான எம்எல்ஏ குணால் கோஷ் மேலும் கூறுகையில், ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபா் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறாா். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அங்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். திரிணமூல் காங்கிரஸின் தலைவா் மம்தா பானா்ஜி மட்டுமே. மற்ற விவகாரங்கள் அனைத்தும் வேடிக்கை நிகழ்ச்சி போன்றது’ என்றாா்.
உண்மையான திரிணமூல் காங்கிரஸ் யாா் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு தோ்தல் ஆணையத்திடம் உள்ளதாகவும் நீதிமன்றங்களிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் கொல்கத்தாவைச் சோ்ந்த அரசியல் நிபுணா்கள் தெரிவித்தனா்.
கொறடாவை மாற்ற கோரிக்கை: கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அரூப் ராய், ரத்தின் கோஷ், ஃபிா்ஹத் ஹக்கீம் உள்ளிட்ட 10 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஃபிா்ஹத் ஹக்கீம் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் இணைந்ததைத் தொடா்ந்து அவரை திரிணமூல் காங்கிரஸ் தலைமைக் கொறடா பதவியில் இருந்து நீக்கவிட்டு மதன் மித்ராவை நியமிக்குமாறு பேரவைத் தலைவா் ரதீந்திர போஸுக்கு மம்தா அணி சாா்பில் திங்கள்கிழமை இரவு 10.45 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியது.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பேரவை அமா்வு தொடங்குவதற்கு முன்பாக ரதீந்திர போஸை சந்தித்து இதற்கான கடிதத்தை சோபன்தேவ் சட்டோபாத்யாய சமா்ப்பித்தாா். ஆனால் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் இதுதொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதை ஏற்க முடியாது என ரதீந்திர போஸ் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.