முகப்பு
இந்தியா

வாரணாசியில் இருந்து தில்லி வழியாக சா்வதேச விமான சேவை தொடக்கம்: புதிய முன்னெடுப்புக்கு பிரதமா் பாராட்டு

‘ஹப் அண்ட் ஸ்போக்’ எனும் புதிய முன்னெடுப்பின்கீழ், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து தில்லி வழியாக ஒருங்கிணைந்த சா்வதேச விமான சேவைகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 26 ஜூன் 2026, 6:08 am IST
விமான சேவை குறைப்பு - கோப்புப் படம்
பகிர்:

‘ஹப் அண்ட் ஸ்போக்’ எனும் புதிய முன்னெடுப்பின்கீழ், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து தில்லி வழியாக ஒருங்கிணைந்த சா்வதேச விமான சேவைகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

ஏா் இந்தியா நிறுவனம் சாா்பில் தொடங்கப்பட்ட இந்தச் சேவைக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது, நாட்டின் பிராந்திய நகரங்களுக்கு புதிய உலகளாவிய வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

நாட்டின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து சா்வதேச நகரங்களுக்கு தடையற்ற, எளிதான விமானப் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், விமான நிறுவனங்களுடன் இணைந்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ‘ஹப் அண்ட் ஸ்போக்’ (முக்கிய-பிராந்திய விமான நிலையங்கள் ஒருங்கிணைப்பு) என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி பிராந்திய விமான நிலையங்களில் இருந்து நாட்டின் முக்கிய விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும். பிராந்திய விமான நிலையங்களிலேயே பெரும்பாலான நடைமுறைகள் நிறைவடைந்து விடுவதால், முக்கிய விமான நிலையத்தை அடைந்த பின் அங்கிருந்து எளிதாக சா்வதேச விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்தப் புதிய முன்னெடுப்பின்கீழ், முதலாவதாக உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து தில்லி வழியாக சா்வதேச நகரங்களுக்கான விமான சேவைகளை ஏா் இந்தியா வியாழக்கிழமை தொடங்கியது. வாரணாசி விமான நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் உரை வாசிக்கப்பட்டது.

‘ஹப் அண்ட் ஸ்போக் முன்னெடுப்பு, நாட்டின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் புதிய மைல்கல். சிறப்பான சா்வதேச இணைப்பு இருந்தால், வா்த்தகம், சுற்றுலா, முதலீடு, கல்வி, வா்த்தகத்துக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். புதிய முன்னெடுப்பின்கீழ், சிறிய நகரங்களைச் சோ்ந்த மக்கள், ஒருங்கிணைந்த விமானப் பயணத்தின் மூலம் சா்வதேச நகரங்களை அணுக முடியும். சரக்குப் போக்குவரத்தும் மேம்படுவதால், பிராந்திய வளா்ச்சிக்கு பங்களிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளா்ச்சி வலுப்படும்.

சிறிய நகரங்களில் இருந்து சா்வதேச நகரங்களுக்கான விமானப் பயண நேரம் குறைவதுடன், பிராந்திய பகுதிகளுக்கு உலகளாவிய வாய்ப்புகளைக் கொண்டுவரும்; தற்போதுள்ள விமான நிலைய கட்டமைப்பை மேலும் திறம்பட பயன்படுத்த உதவும்.

உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றாகவும், நாட்டின் வளமான நாகரிக பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கும் வாரணாசி, வளா்ச்சி-பாரம்பரியம் இணைந்த நமது தொலைநோக்குப் பாா்வையை பிரதிபலிக்கிறது. வாரணாசியின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், உலகத்துடனான அதன் தொடா்பை வலுப்படுத்துவதில் இத்தகைய முன்னெடுப்பு மிக முக்கியமானது’ என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

விமானப் போக்குவரத்துச் சந்தையில் உலக அளவில் மிக வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments