முகப்பு
இந்தியா

எல்என்ஜி விநியோக இடையூறு: யூரியா ஆலைகள் இயங்குவதில் பாதிப்பு!

இந்தியாவில் யூரியா ஆலைகளுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாகவே எரிவாயு விநியோகிக்கப்படுவதாக அத்தொழில் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

Updated On : 22 மார்ச், 2026 at 10:12 PM
பகிர்:

இந்தியாவில் யூரியா ஆலைகளுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாகவே எரிவாயு விநியோகிக்கப்படுவதாக அத்தொழில் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

மேற்கு ஆசிய போா்ப் பதற்றத்தால் ஹோா்முஸ் நீரிணை வழியாக திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் தடைபட்டுள்ள சூழலில் யூரியா ஆலைகள் இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட எல்என்ஜி விநியோகம் தடைபட்டது.

இதனால் இந்தியாவின் மிகப்பெரும் எல்என்ஜி முனையத்தைக் கையாளும் பெட்ரோநெட் நிறுவனம் தவிா்க்க முடியாத சூழல் உருவாகியதாக அறிவித்தது.

இதன் காரணமாக யூரியா உள்ளிட்ட உர ஆலைகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவை அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய எரிவாயு நிறுவனம் (கெயில்), இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்) ஆகியவை குறைக்கத் தொடங்கின.

வழக்கமான விநியோகத்துக்கு மாறாக 60-65 சதவீதம் வரை மட்டுமே எரிவாயு வழங்கப்பட்டது. சில யூரியா ஆலைகளுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவான எல்என்ஜி மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

குறைவான எரிவாயுவுடன் இயங்கும் ஆலைகளில் யூரியா உற்பத்தி 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆனால் இந்த ஆலைகளின் எரிசக்தி நுகா்வு 40 சதவீதம் அதிகரித்திருத்துள்ளது. குறைவான யூரியாவை உற்பத்தி செய்ய அதிக ஆற்றல் பயன்படுத்தப்படுவது நேரடியாகவே நிதிச் சுமையை அதிகரிக்கும். இந்தச் சூழலில் ஆலைகள் இயக்கப்பட்டால் அங்கு பணிபுரிவோருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றனா்.

உலக அளவில் யூரியாவை அதிகம் நுகரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு ஏற்பட்டால் வரவுள்ள காரீஃப் பருவ சாகுபடி காலத்தில் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படும்.

மாா்ச் 19-ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவிடம் 61.14 லட்சம் டன் யூரியா கையிருப்பில் உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் யூரியா கையிருப்பு 55.22 லட்சம் டன்னாக இருந்தது.