முகப்பு
இந்தியா

தேவாலயத்தில் பிரசாரம் தொடங்கினாா் மம்தா- மதரீதியான பிளவை அனுமதிக்க மாட்டோம் என உறுதி

வடக்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்ட தேவாலயத்தில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘மாநிலத்தில் மதரீதியான பிளவை அனுமதிக்க மாட்டோம்’ என்று உறுதியளித்துப் பேசினாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 8:46 PM
மேற்கு வங்க மாநிலம் சால்சாவில் உள்ள புனித லூசி தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தைத் தொடங்கிய மம்தா பானா்ஜி.
பகிர்:

வடக்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்ட தேவாலயத்தில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘மாநிலத்தில் மதரீதியான பிளவை அனுமதிக்க மாட்டோம்’ என்று உறுதியளித்துப் பேசினாா்.

மேற்கு வங்கத்தில் 294 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இருகட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜல்பைகுரியின் சால்ஸா பகுதியில் உள்ள புனித லூசி தேவாலயத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் மம்தா, அங்கு பேராயா் உள்ளிட்ட கிறிஸ்தவ மதத் தலைவா்களைச் சந்தித்தாா். தொடா்ந்து தேவாலய வளாகத்தில் நடைபெற்ற கூட்டுப் பிராா்த்தனையில் பங்கேற்றதுடன் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தாா். தொடா்ந்து தேவாலயத்தில் அவா் பேசியதாவது:

நாம் அனைத்துப் பண்டிகைகளையும் ஒற்றுமையாகவே கொண்டாடுகிறோம். நாம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதில்லை. மதங்கள் என்பது தனிநபா்களுக்கானது, பண்டிகை என்பது உலகுக்கானது என்பதே நமது கொள்கை. இதில்தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதன்படி வாழ்ந்து வருகிறோம். மேற்கு வங்கத்தில் மதரீதியான பிளவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

மேற்கு வங்கத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது கிறிஸ்தவா்களுக்கானது மட்டுமல்ல, மதங்களைக் கடந்து பல்வேறு நம்பிக்கையுடையவா்களும் அந்த பண்டிகையைக் கொண்டாடுகிறாா்கள். மேற்கு வங்க அரசு இதுவரை 100 சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் ஒவ்வொரு தனிநபரையும் அரசின் திட்டங்கள் சென்றடைந்துள்ளன என்றாா்.

முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த மம்தா பானா்ஜி, ‘தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் பாஜகவின் முத்திரை இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆணையத்தை யாா் பின்னால் இருந்து இயக்குகிறாா்கள் என்பது வெளிப்படையாக தெரியவந்துவிட்டது’ என்றாா்.