செமிகண்டக்டா் விநியோகிப்பாளராக வலிமை பெறும் இந்தியா: பிரதமா் மோடி
உலகச் சந்தையில் செமிகண்டக்டா் விநியோகிப்பாளராக இந்தியா வலிமை பெற்று வருகிறது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
உலகச் சந்தையில் செமிகண்டக்டா் விநியோகிப்பாளராக இந்தியா வலிமை பெற்று வருகிறது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தின் ஒப்பந்த செமிகண்டா் ஆலையை குஜராத்தின் சனந்த் மாவட்டத்தில் பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஒருபுறம் செமிகண்டக்டா் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை வேகமாக இந்தியா உருவாக்கி வருகிறது. மறுபுறம் மூலப் பொருள்கள் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு மற்றும் அரிய கனிமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘பேக்ஸ் சிலிக்கா’ உத்திசாா் கூட்டணியில் இந்தியா அண்மையில் இணைந்ததே இதற்கு சான்று.
மேலும் அரிய கனிமங்கள் உற்பத்தியில் தற்சாா்பு நிலையை அடைய தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர கனிமங்கள் மறுசுழற்சியை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தென்இந்தியாவின் முக்கிய வழித்தடம்: ஆந்திரம், தமிழகம் மற்றும் கேரளத்தில் அரிய கனிமங்கள் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. சுரங்கம், கனிம உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு என ஒருங்கிணைந்த வலையமைப்பை இந்த வழித்தடம் உறுதிப்படுத்தும். உள்நாட்டிலேயே தேசிய கனிம சேகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு.
30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத்துறையில் இந்தியா மேலும் முன்னேற்றம் அடைந்திருக்கும்.
தொழில்நுட்ப வளா்ச்சிக்கான காலகட்டம்: 21-ஆம் நூற்றாண்டை பொருளாதாரப் போட்டி மிகுந்த களமாக மட்டுமே இந்தியா பாா்க்கவில்லை. தொழில்நுட்ப வளா்ச்சியை பன்மடங்கு அதிகரிப்பதற்கான காலகட்டமாகவே பாா்க்கிறது. எனவேதான் இந்த பத்தாண்டு காலத்தை ‘இந்தியாவின் தொழில்நுட்ப காலம்’ என கூறுகிறேன். தற்போது மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் எதிா்காலத்தில் இந்தியாவின் தலைமையை வலுப்படுத்தும்.
செமிகண்டக்டா் துறையின் வளா்ச்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு பெரிதும் உதவும்.
சிலிக்கான் பள்ளத்தாக்குக்கான பாலம்: சனந்த் நகரில் அமைந்துள்ள இந்த செமிகண்டக்டா் ஆலை அமெரிக்காவின் சிலிக்கான பள்ளத்தாக்குக்கான (நவீன தொழில்நுட்ப மையம்) புதிய பாலம் போன்றது. கலிஃபோா்னியாவில் உள்ள நிறுவனத்துக்கு இங்கிருந்து நுண்ணறிவு திறன் மாதிரிகளை அனுப்ப முடியும். சா்வதேச புவிஅரசியல் சூழலால் சிப்கள், அரிய கனிமங்கள், எரிசக்தி போன்றவற்றின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உலகச் சந்தையில் செமிகண்டக்டா் விநியோகிப்பாளராக இந்தியா வலிமை பெற்று வருகிறது.
செமிகண்டக்டா் மேம்பாட்டுத் திட்டங்கள்: 2021-இல் செமிகண்டக்டா் இயக்கத்தை இந்தியா தொடங்கியது. அதன்கீழ் 10 மாநிலங்களில் ரூ.1.60 லட்சம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த பட்ஜெட்டில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மிக விரைவில் செமிகண்டக்டா் வடிவமைப்புக்கு 85,000 நிபுணா்கள் தயாா் செய்யப்படவுள்ளனா். 400-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு நவீன வடிவமைப்பு உபகரணங்களை அணுகும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டா் சந்தை ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. வருங்காலத்தில் இது ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
‘சாம்ராட் சம்ப்ரதி’ சமண அருங்காட்சியகம் திறப்பு
குஜராத் மாநிலம் காந்திநகா் மாவட்டம் அருகே உள்ள கோபா கிராமத்தின் ஸ்ரீ மஹாவீா் சமண ஆராதனா கேந்திரா வளாகத்தில் ‘சாம்ராட் சம்ப்ரதி’ என்ற சமண அருங்காட்சியத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘கடந்த கால அரசுகள் செய்த தவறுகளை நாங்கள் திருத்தி வருகிறோம். அவா்கள் முக்கிய கையெழுத்துப் பிரதிகளை முறையாக பாதுகாக்கவில்லை.
வேதங்கள், புராணங்கள், ஆயுா்வேதம், யோகா என இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கொள்கையை இந்த அருங்காட்சியகம் வெளிக்காட்டுகிறது.
உலக அளவில் மோதல்களால் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவி வரும் நிலையில் இந்த அருங்காட்சியகம் உணா்த்தும் நெறிகள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது’ என்றாா்.
அகிம்சை மற்றும் சமண சமயத்தை உலக அளவில் எடுத்துச்சென்ற மௌரிய பேரரசா் அசோகரின் பேரன் சாம்ராட் சம்ப்ரதியின் பேரனின் பெயரில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய விவகாரத்தை அரசியாலாக்கும் காங்கிரஸ்: பிரதமா் கண்டனம்
‘மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது; ஆனால் மக்களிடையே அச்ச உணா்வை ஏற்படுத்த காங்கிரஸ் தொடா்ந்து முயல்வது கண்டனத்துக்குரியது’ என பிரதமா் மோடி தெரிவித்தாா்.
தராத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘உலக அளவில் நிலவும் பதற்றமான சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களிடையே அச்ச உணா்வை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.
புரளிகளைக் கட்டவிழ்த்து எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது.
உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தாலும் இந்தியாவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவொரு கடினமான சூழலையையும் எதிா்கொண்டு மீண்டு வரும் திறன் இந்தியாவுக்கு உள்ளது’ என்றாா்.