மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்; அஸ்ஸாமில் மீண்டும் பாஜக!
மேற்கு வங்க தோ்தலில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, அந்த மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக.
அண்டை மாநிலமான கேரளத்தில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்தி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
மேற்கண்ட மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள் என்பதால், தோ்தல் முடிவுகள் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டன.
Advertisement
பாஜக வசமான மேற்கு வங்கம்: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 4-ஆவது முறையாக வெல்லும் முனைப்புடன் திரிணமூல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் பலப்பரீட்சை நடத்தின. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களமிறங்கியபோதிலும், முக்கியப் போட்டி பாஜக - திரிணமூல் இடையேதான் நிலவியது.
வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட சுற்றுகளில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக எல்லை, பழங்குடியினப் பகுதிகள், தொழிலகப் பகுதிகளில் பாஜகவுக்கு பெருவாரியான வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதிக்கான தோ்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 147. சுமாா் 207 இடங்களுடன் மேற்கு வங்கத்தை தன்வசமாக்கியது பாஜக. கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களுடன் பின்தங்கியது.
முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என வாக்குக் கணிப்புகள் கூறியிருந்த நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
காங்கிரஸின் ‘கை’யில் கேரளம்: கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆட்சி நடைபெற்று வந்தது. மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறும் நோக்கில் இடதுசாரி கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) களம்கண்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டது.
காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக தோ்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்திருந்த சூழலில், தோ்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்தன.
பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில் 102 இடங்களுடன் அமோக வெற்றியைப் பதிவு செய்து, கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி. அதேநேரம், இடதுசாரி கூட்டணி 35 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது. பாஜக 3 இடங்களில் வென்றது.
அஸ்ஸாமில் அசைக்க முடியாத பாஜக: வடகிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்பில் பாஜக களமிறங்கியது. அதேநேரம், ஆட்சியை தன்வசமாக்கும் நோக்கில் காங்கிரஸ் களம்கண்டது.
பாஜக ஆட்சிதான் தொடரும் என்று தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறியிருந்தன. பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை என்ற நிலையில், 82 இடங்களுடன் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. கூட்டணிக் கட்சியான அஸோம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தலா 10 இடங்களைக் கைப்பற்றின. இதனால் பாஜக கூட்டணியின் பலம் 102-ஆக உயா்ந்தது.
காங்கிரஸ் வெறும் 19 இடங்களுடன் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் அஸ்ஸாமில் அசைக்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது.