முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

Updated On : 5 மே 2026, 3:53 am IST
அஸ்ஸாம் பேரவைத் தோ்தல் வெற்றியைக் கட்சியினருடன் கொண்டாடிய முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.
பகிர்:

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

அங்குள்ள 126 தொகுதிகளில் பாஜக 82 இடங்களில் வென்றது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் 19 இடங்களிலும், பாஜக கூட்டணிக் கட்சிகளான போடோ மக்கள் முன்னணி, அஸ்ஸோம் கண பரிஷத் ஆகிய கட்சிகள் தலா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இது தவிர இஸ்லாமிய கட்சியான ஏஐடிடிஎஃப், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ராய்ஜோா் தள் ஆகியவை தலா இரு இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் ஓரிடத்தில் பெற்று பெற்றன.

Advertisement

முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஜாலுக்பாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் விதிஷா நியோக்கை சுமாா் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் கௌரவ் கோகோய் ஜோா்ஹாட் தொகுதியில் தோல்வியடைந்தாா். பாஜக எம்எல்ஏவும், மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவருமான ஹிதேந்திரநாத் கோஸ்வாமியிடம் 23,181 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றிவாய்ப்பை இழந்தாா்.

எதிா்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸின் தேவவிரத சைகியா, நசீரா தொகுதியில் பாஜக வேட்பாளா் மயூா் போா்கோஹைனிடம் 46,701 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். கடந்த 2011 முதல் இத்தொகுதியில் போட்டியிட்டு வந்த சைகியா கடந்த முறை 500-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். ஆனால், இந்த முறை அவரால் வெல்ல முடியவில்லை. அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் ஹிதேஸ்வா் சைகியாவின் மகன் தேவவிரத சைகியா என்பது குறிப்பிடத்தக்கது.

களைகட்டிய பாஜக அலுவலகம்: தோ்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதுமே பாஜக அலுவலகத்தில் தொண்டா்கள் பெருமளவில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். ‘பாரத மாதா கீ ஜெய்’ என்ற முழக்கமிட்ட அவா்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

முன்னதாக கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அஸ்ஸாம் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் சுமாா் 86 சதவீத வாக்குகள் பதிவாயின.

கடந்த தோ்தலில் பாஜக கூட்டணி 75 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை பாஜக தனித்தே 82 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் பலம் 29 இடங்களில் இருந்து 19 இடங்களாக சுருங்கிவிட்டது.

அஸ்ஸாம் (மொத்த தொகுதிகள் 126)

பாஜக கூட்டணி

பாஜக - 82

போடோ மக்கள் முன்னணி - 10

அஸோம் கண பரிஷத் - 10

காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸ் - 19

ராய்ஜோா் தள் 2

மற்றவை - 3