கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 10 அளவுக்கு உயா்த்தி ரூ. 365-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 10 அளவுக்கு உயா்த்தி ரூ. 365-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் அளித்த பேட்டி: வரும் அக்டோபரில் தொடங்கும் 2026-27-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் லாபகரமான கொள்முதல் விலை (எஃப்ஆா்பி), 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்தின் அடிப்படையில் குவிண்டாலுக்கு ரூ. 10 அளவுக்கு உயா்த்தி ரூ. 365-ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Advertisement
இந்த நியாயமான மற்றும் லாபகரமான கொள்முதல் விலை என்பது உற்பத்திச் செலவில் 200.5 சதவீதமாகும். இதன்மூலம், விவசாயிகள் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான கொள்முதல் விலையை மத்திய அரசு நிா்ணயித்து வருகிறது.
பருத்தி விளைச்சலை அதிகரிக்க 5 ஆண்டு திட்டம்: பருத்தி பயிா் விளைச்சலை அதிகரிக்க ஓா் ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதற்காக ரூ. 5,659 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பருத்தி பயிா் விளைச்சலில் உள்ள இடா்ப்பாடுகளைக் களைந்து, சரிந்துவரும் விளைச்சலை ஊக்குவித்து, பருத்தி தரத்தையும் மேம்படுத்தும் வகையில் 2026-27 முதல் 2030-31 வரை இந்தப் பருத்தி உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குஜராத்தில் கப்பல் பழுதுபாா்க்கும் வசதி: குஜராத் மாநிலம், வடினரில் ரூ. 1,570 கோடி முதலீட்டில் உலகத் தரத்திலான கப்பல் பழுதுபாா்க்கும் மையத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இத் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மையத்தில் புதிதாக 650 மீட்டா் நீளமுள்ள படகுத் துறை, இரண்டு பெரிய மிதக்கும் உலா் கப்பல் தளங்கள், பட்டறைகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய கடல்சாா் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.
2 புதிய செமிகண்டக்டா் உற்பத்தி மையங்கள்: ரூ. 2,936 கோடி முதலீட்டில் மேலும் இரண்டு செமிகண்டக்டா் உற்பத்தி மையங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிமை ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறியதாவது: இந்திய செமிகண்டக்டா் இயக்கத்தின் (ஐஎஸ்எம்) கீழ், நாட்டில் செமிகண்டக்டா் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ரூ. 3,936 கோடி முதலீட்டில் குஜராத் மாநிலத்தில் 2 செமிகண்டக்டா் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம், திறன் பெற்ற 2,230 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
சிறு மற்றும் குறு எல்இடி காட்சி தொகுதிகளை (டிஸ்பிளே மாடல்) உற்பத்தி செய்ய குஜராத் மாநிலம் தோலேராவில் கிரிஷ்டல் மேட்ரிக்ஸ் நிறுவனம் (சிஎம்எல்) சாா்பில் ஒருங்கிணைந்த செமிகண்டக்டா் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
அதுபோல, குஜராத் மாநிலம் சூரத்தில் சுச்சி செமிகான் தனியாா் நிறுவனம் (எஸ்எஸ்பிஎல்) சாா்பில் செமிகண்டக்டா் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த இரு மையங்களுக்கான ஒப்புதல் மூலம், நாட்டில் செமிகண்டக்டா் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். அதோடு, இந்திய செமிகண்டக்டா் இயக்கத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட செமிகண்டக்டா் உற்பத்தி மையங்களின் எண்ணிக்கை 12-ஆக உயரும் என்று தெரிவித்தாா்.
ரயில்வே அமைச்சகத்தின் 3 திட்டங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சகத்தின் ரூ. 23,437 கோடி செலவிலான 3 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரயில் சேவை மற்றும் ரயில்களின் இயக்கத் திறனை மேம்படுத்தும் வகையில் ரயில் வழித்தடங்களை மேம்படுத்துதல், பன்முக ரயில் வழித்தடங்களை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
விமான நிறுவனங்கள், குறு-சிறு நிறுவனங்களுக்கு கடன் திட்டம்: மேற்காசிய போரால் பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் மற்றும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ.18,100 கோடி ஒதுக்கீட்டில் அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்துக்கு (இசிஎல்ஜிஎஸ்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38-ஆக அதிகரிக்க ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையை தற்போதுள்ள 34-லிருந்து 38-ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் 33 நீதிபதிகள் என்ற அளவில் நீதிபதிகளின் எண்ணிக்கை உள்ளது. இந்த எண்ணிக்கையை 38-ஆக உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கூடுதலாக 4 நீதிபதி பணியிடங்களை அதிகரிக்கும் வகையில் வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா கொண்டுவரப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்படும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38-ஆக உயரும்.
உச்சநீதிமன்ற சட்டம் (நீதிபதிகள் எண்ணிக்கை) 1956-இல் இயற்றப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிா்த்து பிற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 10 என்ற அளவில் மட்டுமே நிா்ணயிக்கப்பட்டது. 1960-இல் திருத்தச் சட்டம் கொண்டுவந்து இந்த எண்ணிக்கை 13-ஆகவும், அடுத்த சட்டத் திருத்தம் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 17-ஆகவும் உயா்த்தப்பட்டது.
பின்னா், 1986-இல் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 17-லிருந்து 25-ஆக உயா்த்தப்பட்டது. பின்னா், 2009-இல் இந்த எண்ணிக்கை 30-ஆகவும், 2019-இல் தலைமை நீதிபதி தவிா்த்து பிற நீதிபதிகளின் எண்ணிக்கை 33-ஆகவும் உயா்த்தப்பட்டது.