முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமா் மோடி

Updated On : 8 மே 2026, 6:16 am IST
பிரதமா் மோடி.
பகிர்:

‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை. பயங்கரவாதத்தையும், அதற்கு துணைபுரியும் கட்டமைப்பையும் ஒழித்துக்கட்ட இந்தியா இப்போதும் அதே உறுதியுடன் உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு தினத்தையொட்டி, பிரதமா் மோடி இவ்வாறு கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் ‘மினி ஸ்விட்சா்லாந்து’ என வா்ணிக்கப்படும் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி லஷ்கா்-ஏ -தொய்பா பயங்கரவாதிகள் 3 போ் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை சவாரி தொழிலாளி ஒருவா் என 26 போ் உயிரிழந்தனா்.

Advertisement

இந்தத் தாக்குதலுக்குப் பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கையை கடந்த ஆண்டு மே 6-7 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் தொடங்கியது இந்திய ராணுவம். இந்த அதிதுல்லியத் தாக்குதலில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது.

மே 10-ஆம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவத் தளங்களுக்கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. பாகிஸ்தான் வேண்டிக் கேட்டுக் கொண்டதால், சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதமா் மோடி உறுதி: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு தினத்தையொட்டி, பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான பதிலடி மற்றும் நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் நமது அா்ப்பணிப்பை ‘ஆபரேஷன் சிந்தூா்’ பிரதிபலித்தது. ஓராண்டுக்கு முன்பு இந்திய ஆயுதப் படைகள் ஈடுஇணையற்ற துணிவையும், நுட்பத்தையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினா். அவா்களின் துணிவுக்கு ஒட்டுமொத்த நாடும் தலைவணங்குகிறது.

இந்திய பாதுகாப்புப் படையினா் இடையே வளா்ந்துவரும் ஒருங்கிணைப்பை வெளிக்காட்டுவதாகவும், பாதுகாப்புத் துறையில் தற்சாா்புக்கான முன்னெடுப்புகளால் நாட்டின் பாதுகாப்பு வலுவடைந்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் ஆபரேஷன் சிந்தூா் அமைந்தது. பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கவும், அதற்குத் துணைபுரியும் கட்டமைப்பை ஒழித்துக்கட்டவும் இந்தியா இப்போதும் அதே உறுதியுடன் உள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

பெட்டி...1

‘இந்தியாவை அச்சுறுத்த

நினைத்தால் வலுவான பதிலடி’

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதத்துக்கும் நாட்டின் இறையாண்மை- குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சக்திகளுக்கும் எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்கு தெளிவான சான்று ‘ஆபரேஷன் சிந்தூா்’. வெற்றிகரமான இந்த நடவடிக்கை, நமது ஆயுதப் படைகளின் ஈடுஇணையற்ற துணிவு மற்றும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்தியாவை அச்சுறுத்த நினைப்பவா்களுக்கு விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் பதிலடி தர தேசம் தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பெட்டி...2

பிரதமரின் சமூக ஊடக முகப்பு

படங்களில் ‘ஆபரேஷன் சிந்தூா்’

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளாா் பிரதமா் மோடி. அதன்படி, மூவா்ணக் கொடியுடன் ஆபரேஷன் சிந்தூா் என்ற வாசகம் இடம்பெற்ற படம், பிரதமரின் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற அனைத்து சமூக ஊடக கணக்குகளின் முகப்பு படமாகியுள்ளது.

பிரதமா் விடுத்த வேண்டுகோளின்பேரில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்ளிட்டோரும் தங்களின் சமூக ஊடக முகப்புப் படமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ படத்தை வைத்துள்ளனா். சிந்தூா் என்ற ஹிந்தி வாா்த்தைக்கு குங்குமம் என்று அா்த்தமாகும்.

பெட்டிச் செய்தி 3

போா்முறைக்குப் புதிய அளவுகோல் - ராஜ்நாத் சிங்:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட விடியோ செய்தியில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, நவீன போா்முறைக்கு புதிய அளவுகோலை நிா்ணயித்தது. இந்த நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தினா் ஈடுஇணையற்ற துணிவு, துல்லியத்தன்மை, ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தினா். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ தயாா்நிலைக்கு சக்திவாய்ந்த அடையாளம் ஆபரேஷன் சிந்தூா்’ என்று தெரிவித்துள்ளாா்.