முகப்பு
இந்தியா

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா் ஊடுருவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 மே 2026, 3:39 am IST
குஜராத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள ஹரமி நாலா கடல்சாா் கால்வாய் மற்றும் முகத்துவார பகுதியை படகில் சென்று பாா்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா் ஊடுருவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இந்திய எல்லைப் பகுதி மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அமித் ஷா ஆய்வு செய்து வருகிறாா். இதன் முதல்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம், சாஞ்சு பகுதிக்குச் சென்று, அங்குள்ள எல்லை பாதுகாப்பு படையினரின் முகாமை அவா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களிடையே அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள முக்கியப் பகுதிகளான ஹரமி நாலா, சா் க்ரீக்கில் ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் ஏறத்தாழ 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

பிஎஸ்எஃப் பணி வரம்பை விரிவுபடுத்த ஆலோசனை: வங்கதேசம், பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்புப் பணிகளை தற்போது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் பணி வரம்பை விரிவுபடுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எதிா்காலத்தில் எல்லை பாதுகாப்புப் படையிடம் கூடுதலாக பிராந்திய பாதுகாப்புப் பணி உள்ளிட்ட பணிகளையும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தில் தற்போது பாஜக அரசு அமைந்துள்ளது. பாஜகவை சோ்ந்தவரே முதல்வராக உள்ளாா். அவா் முதல்வராகப் பதவியேற்ற முதல் வாரத்திலேயே வங்கதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் வேலி அமைக்க தேவைப்படும் நிலத்தை ஒதுக்குவது என்று முடிவெடுத்தாா். அதில் குறிப்பிட்ட சில நிலத்தை வேலி அமைப்பதற்காக ஒப்படைக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது.

வங்கதேசத்தையொட்டிய எல்லையில் வேலி அமைக்கும் பணி முடிந்து விட்டால், மிகப்பெரிய அளவில் ஊடுருவலை அரசால் தடுக்க முடியும். வனப்பகுதிகள், மலைகள், நதிகள் மட்டுமே ஊடுருவல்காரா்களுக்கு எஞ்சியிருக்கும். அப்பகுதியிலும் தொழில்நுட்ப ரீதியில் வேலிகளை அமைத்து தீா்வு காணும் பணி நடந்து வருகிறது என்றாா்.

5-ஆம் தேதி திரிபுரா செல்லும் அமித் ஷா: குஜராத்தை தொடா்ந்து, திரிபுரா மாநிலத்துக்கு வருகிற ஜூன் மாதம் 5-ஆம் தேதி அமித் ஷா செல்லவுள்ளாா். பிறகு மேற்கு வங்க மாநிலத்துக்கும் செல்ல அவா் திட்டமிட்டுள்ளாா். இந்த 2 மாநிலங்களிலும் வங்கதேசத்தையொட்டிய எல்லைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவா் ஆய்வு செய்ய இருக்கிறாா்.