முகப்பு
கண்ணோட்டம்

மக்களைச் சந்திக்கும் பணியில் சுவாமிஜி!

மடத்தில் சுவாமிஜியின் நாட்கள் வேதாந்தப் படிப்பு, தெய்வ சிந்தனை, ஜபம், தியானம் என்று ஆன்மீக சாதனைகளிலேயே கழிந்தது.

Updated On : 11 மார்ச் 2013, 5:48 pm IST
பகிர்:

மடத்தில் சுவாமிஜியின் நாட்கள் வேதாந்தப் படிப்பு, தெய்வ சிந்தனை, ஜபம், தியானம் என்று ஆன்மீக சாதனைகளிலேயே கழிந்தது. வேதாந்த நூல்களை வாங்கக் கூட அந்த நாட்களில் வசதி இருக்கவில்லை.  காசியிலுள்ள பிரமத தாஸ் மித்ரரிடமிருந்து சில நூல்களை வாங்கிப் படித்தார். தமக்கு எழுந்த சந்தேகங்களை அவருக்கு எழுதித் தெளிவு பெற்றார். பாணினியின் அஷ்டாத்யாயி போன்ற சமஸ்கிருத இலக்கண நூல்களைப் படிக்க விரும்பினார். அதனைப் பிரமத தாஸ் மித்ரருக்குத் தெரிவித்தார்.

ஆயினும் சுவாமிஜியின் உள்ளம் எபோதும் தனிமை வாழ்க்கையையே நாடியது. இரண்டு முறை சென்று வந்த யாத்திரைகள் அவரது மனத்தில் ஆழ்ந்த சிந்தனைகளை எழுப்பியிருந்தன. இத்தகைய வாழ்க்கையை நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆர்வம் அவரில் வளர்ந்திருந்தது. ஆனால் குருதேவர் அளித்திருந்த பொறுப்பு சுவாமிஜியின் ஆர்வத்திற்குத் தடைபோட்டது.   வரலாற்றிலேயே புதிதொரு துறவியர் பரம்பரையை உருவாக்கி, அதன் பொறுப்பை சுவாமிஜியிடம் ஒப்படைத்திருந்தார் ஸ்ரீராம கிருஷ்ணர். இந்த நிலையில் அவர்களுடன் தங்குவது கட்டாயமாயிற்று. ஆர்வம், பொறுப்பு என்ற இரண்டிற்கும் இடையில் சுவாமிஜியின் மனம் ஊசலாடியது.

அதே வேளையில், ஸ்ரீராமகிருஷ்ணர் தமக்கு அளித்த பணியின் மற்றொரு பகுதியும் அவரது நினைவில் நிழலாடியது. நிழலாடியது என்பதைவிட அதுதான் அவரது மனத்தைப் பேரளவிற்கு ஆக்கிரமித்திருந்தது என்று கூறலாம். ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை உலகெலாம் பரப்புவதே அது. மீன் ஒன்றுதான் ஆனால் அதனைப் பிள்ளைகளின் ஜீரண சக்திக்கு ஏற்ப குழம்பு, சட்னி, வறுவல் என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக அளிக்கிறாள் தாய். இது ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகின்ற உவமை. அதுபோல், ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை உலகிற்கு அளிக்க வேண்டும். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமாக அதனை அளிப்பது இயலாது. மக்களை நேரடியாகச் சந்திக்காமல் அதை யாருக்கு, எப்படி அளிப்பது என்பதை நிர்ணயிக்க இயலாது. எனவே அவர்களைச் சந்தித்தேயாக வேண்டும் என்று முடிவு செய்தார் சுவாமிஜி.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.