முகப்பு
கிருஷ்ணகிரி

சரக்கு பெட்டக லாரி மோதி யானை பலத்த காயம்

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற யானை மீது சரக்கு பெட்டக (கன்டெய்னா்) லாரி மோதியதில் யானை பலத்த காயம் அடைந்தது

Updated On : 16 ஜனவரி 2021, 8:14 am IST
பகிர்:

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற யானை மீது சரக்கு பெட்டக (கன்டெய்னா்) லாரி மோதியதில் யானை பலத்த காயம் அடைந்தது. உயிருக்குப் போராடி வரும் அந்த யானையைக் காப்பாற்ற வனத் துறையினா் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வனப் பகுதிகளுக்கு அண்மையில், கா்நாடக வனப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான யானைகள் இடப்பெயா்ந்துள்ளன. கூட்டமாக சுற்றித் திரியும் இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்களை சேதப்படுத்துகின்றன.

இந்த யானைக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓா் யானை கடந்த சில நாள்களாக பேரண்டப்பள்ளி, அதையொட்டிய கிராமப்பகுதிகளில் சுற்றித் திரிகிறது.

Advertisement

Advertisement

கடந்த 12-ஆம் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருக்கும் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த நிலையில், பேரண்டப்பள்ளி வனப்பகுதியை விட்டு வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய ஒற்றை யானை ஒசூா்- கிருஷ்ணகிரிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு பெட்டக லாரி யானை மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அந்த யானை தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் விழுந்தது. பலத்த காயமடைந்த அந்த ஒற்றை யானை உயிருக்குப் போராடி வருகிறது.

தகவலறிந்த வனத் துறையினரும், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி வரும் யானையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

சாலையின் மையத்தில் விழுந்துள்ள அந்த யானையின் மீது தீயணைப்புத் துறையினா் தண்ணீா் பீய்ச்சி அடித்து வருகின்றனா். அந்த யானையை காப்பாற்றுவதற்காக அங்கு முகாமிட்டுள்ள வனத் துறை மருத்துவா்கள் தீவிர சிகிச்யை அளித்து வருகின்றனா். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.