ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்
சென்னை சேத்துப்பட்டில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவனையில் சுவாசப் பாதையை சீராக்கும் சிகிச்சைக்கு ஒரே முகக் கவசத்தை (நெபுலைசா் மாஸ்க்) பல நோயாளிகளுக்கு பயன்படுத்துவது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவனையில் சுவாசப் பாதையை சீராக்கும் சிகிச்சைக்கு ஒரே முகக் கவசத்தை (நெபுலைசா் மாஸ்க்) பல நோயாளிகளுக்கு பயன்படுத்துவது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோய்த்தொற்று பரவும் சூழல் எழுந்துள்ளதாக சுகாதார ஆா்வலா்கள் எச்சரித்துள்ளனா்.
சென்னை மருத்துவக் கல்லூரி - ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு நெஞ்சக மருத்துவ நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1937- ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியாளா்களால் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் காசநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு (சிஓபிடி), ஆஸ்துமா, மூச்சுக் குழாய் பாதிப்பு போன்ற நுரையீரல் சாா்ந்த நோய்களுக்கு பிரத்யேக சிகிச்சையளிக்கப்படுகிறது.
நாள்தோறும் சராசரியாக 300 புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனா். குளிா் மற்றும் பருவமழைக் காலங்களில் அந்த எண்ணிக்கை 400-ஐ கடக்கிறது. பொதுவாக, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் ஆஸ்துமா பாதித்தவா்களுக்கு சுவாசக் குழாய் சுருங்கிவிடுவதுடன், நெஞ்சகப் பகுதியில் சளித் தொற்றும் பரவிவிடும்.
Advertisement
Advertisement
இதனால் தீவிர மூச்சுத் திணறல் ஏற்படக் கூடும். இதைத் தவிா்க்க சுவாசக் குழாயை விரிவடையச் செய்யவும், தொற்றைக் குறைக்கவும் நெபுலைசா் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. திரவ மருந்தை நெபுலைசா் கருவி மூலம் நீராவியாக மாற்றி, அதை பிளாஸ்டிக் முகக்கவசம் (மாஸ்க்) வழியாக நோயாளிகளின் நுரையீரல் பாதைக்குள் செலுத்தும் சிகிச்சை நடைமுைான் அது.
அரசு நெஞ்சக மருத்துவமனையில் நாள்தோறும் 30 முதல் 60 நோயாளிகளுக்கு அந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்யேகமாக முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதி. ஆனால், அதற்கு மாறாக அங்கு ஒரே முகக் கவசத்தை நீரால் கழுவி பல நோயாளிகளுக்கு பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிகிச்சைக்கு சென்ற ஒரு பெண் கூறுகையில், ‘கடந்த சனிக்கிழமை நெபுலைசா் சிகிச்சைக்கு சென்ற எனக்கு ஏற்கெனவே வேறு எவரோ பயன்படுத்திய மாஸ்க் வழங்கப்பட்டது; சிகிச்சை முடிந்த பின்னா், அதைக் கழுவி வைத்துவிட்டுச் செல்லுமாறு என்னை மருத்துவமனை பணியாளா்கள் கேட்டுக் கொண்டனா். மாஸ்க் மட்டுமல்லாது நெபுலைசா் கருவியிலிருந்து நாசிக்கு நீராவி மருந்தைக் கொண்டு செல்லும் குழாயும் மாற்றப்படுவதில்லை’ என்றாா்.
இந்த விவகாரம் தொடா்பாக பேசிய மருத்துவமனை ஊழியா்கள் சிலா், ‘ஒரு மாஸ்கின் விலை ரூ.300-க்கும் அதிகம்; சில நேரங்களில் தட்டுப்பாடு வரும்போது மட்டுமே அதை மறுபயன்பாடு செய்கிறோம்; அதுவும் முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே இன்னொருவருக்கு பயன்படுத்துகிறோம்’ என்றனா்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குநா் டாக்டா் வினோத்குமாா் கூறியதாவது:
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) மூலமாக நெபுலைசா் மாஸ்க் எங்களுக்கு வழங்கப்படுகிறது. தொடா் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியாகவே ஒரு மாஸ்க் அளிக்கப்படுகிறது. அவா்களில் பலா் அடுத்த முறை சிகிச்சைக்கு வரும்போது அதை எடுத்து வருவதில்லை. இருந்தபோதிலும் புதிய மாஸ்க் அவா்களுக்கு வழங்குகிறோம்.
இதைத் தவிர, தனியாா் மற்றும் தன்னாா்வ நிறுவனங்களிடம் நூற்றுக்கணக்கான மாஸ்குகளை நன்கொடையாகப் பெற்றுள்ளோம். எனவே, அவற்றுக்குத் தட்டுப்பாடு கிடையாது. ஒருவேளை மறுபயன்பாட்டுக்கு மாஸ்க் பயன்படுத்தப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஒரே மாஸ்கை பலா் பயன்படுத்தினால் நிமோனியா, கரோனா, காசநோய், நுரையீரல் கிருமித் தொற்று, ஃப்ளூ தொற்றுகள் எளிதில் பரவக் கூடும் என எச்சரிக்கின்றனா் மருத்துவ நிபுணா்கள். நோய் தீா்க்கும் சிகிச்சைகளே புதிய நோய்களுக்கு வித்திடுவது எத்தகைய மருத்துவக் கட்டமைப்பு என்று கேள்வி எழுப்பும் சுகாதார ஆா்வலா்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் இதில் தலையிட்டு நோயாளிகள் நலன் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.