முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 2010-ல் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து

Updated On : 2 ஏப்ரல், 2013 at 1:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 2010-ல் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அந்த ஆலை தாக்கல் செய்த  மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அதையடுத்து, ஆலையை மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், ஆலையிலிருந்து வாயு கசிந்ததால் ஆலையை மூடுவதற்கு கடந்த 30-ம் தேதி  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவின் அவசியத்தை விளக்கும் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்ய நீதிமன்றத்திடம் வாரியம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால், "தீர்ப்பு வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்று நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுதான்சு ஜோதி முகோபாத்யாய அடங்கிய அமர்வு கூறியது.  மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், "ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த மார்ச் 23-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டது.

அது குறித்து மார்ச் 27-ம் தேதி ஆலை நிர்வாகம் பதில் அளித்தது.  அந்த பதில் திருப்தி அளிக்காததால் ஆலையை மூடுவதற்கு மார்ச் 30-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையை விளக்கும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்புகிறோம். அதற்கு அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டார்.

அதையடுத்து பேசிய நீதிபதிகள், "ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீட்டு மனு மீது எங்கள் அமர்வு விசாரணை நடத்தியது. 

பல்வேறு ஆய்வுக் குழுக்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் வழக்கின் தீர்ப்பு சில நாள்களுக்கு முன்பே எழுதப்பட்டு விட்டது. தீர்ப்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) வழங்கப்படும்.  விதிகளை மீறிச் செயல்படும் ஒரு ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது.

அது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யத் தேவையில்லை.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்த நடவடிக்கை, ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை பாதிக்காது' என்று குறிப்பிட்டனர்.

அதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஆலையில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் அதையொட்டி அங்கு நடைபெற்ற மக்கள் போராட்டங்கள், கடையடைப்பு ஆகிய சம்பவங்களையும் நீதிபதிகளிடம் விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.