கட்டுப்பாட்டை இழந்து போட்டோ ஸ்டுடியோவுக்குள் புகுந்த மணல் லாரி: 2 பேர் படுகாயம்
திருவள்ளூர் அருகே அதிகாலை வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி பூட்டப் பட்டிருந்த போட்டோ ஸ்டுடியோவுக்குள் புகுந்த விபத்தில் இரவுக் காவலர், மேலாளர் ஆகியோர்
திருவள்ளூர் அருகே அதிகாலை வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி பூட்டப் பட்டிருந்த போட்டோ ஸ்டுடியோவுக்குள் புகுந்த விபத்தில் இரவுக் காவலர், மேலாளர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
திருவள்ளூரை அடுத்த ஆயில்மில் பஸ் நிறுத்தம் அருகில் எம்.எஸ்.கே போட்டோ கலர் லேப் என்ற ஸ்டூடியோ உள்ளது. இந்த ஸ்டூடியோவில் இரவுக் காவலர் சகாயம் (60) மற்றும் மேலாளர் கோவிந்தன் (64) ஆகியோர் தினமும் இரவில் அங்கேயே தங்குவது வழக்கம்.இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வெள்ளவேட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மணல் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தொலைபேசி இணைப்புப் பெட்டி, ஒரு பைக் ஆகியவற்றை இடித்துத் தள்ளிக் கொண்டு இரும்பு ஷட்டர் பூட்டப்பட்டிருந்த ஸ்டூடியோவுக்குள் புகுந்து நின்றது.
இந்த விபத்தில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தன் மற்றும் சகாயம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியை விட்டுவிட்டு தலைமறைவானார். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரோந்து வாகன போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஜே.பி.பி., இயந்திரம் மற்றும் மற்றொரு லாரி மூலம் அந்த லாரியை வெளியில் எடுத்தனர். பின்னர் போக்குவரத்தை சீர் செய்தனர்.திருவள்ளூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையான ஜே.என்.சாலையில் அதிகளவில் விபத்துகளில் சிக்குவது மணல் லாரிகளும், டிப்பர் லாரிகளும் தான். வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், போக்குவரத்து போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுத்து அந்த லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த கருவிகளை பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.