அண்மைக் காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக தொடர்ந்து உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் நடுத்தர மக்களை மட்டுமல்லாது இந்தத் தொழிலையே பரம்பரையாக நம்பி இருந்த நகை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் அடியாக விழுந்துள்ளது.
மன்னர் காலம் தொட்டு இன்று வரை கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலை குலத்தொழிலாளாக செய்து வரும் நகை தொழிலாளர்கள் பொன், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களால் ஆபரணங்கள் கலை நயத்துடன் நகைகள் செய்து வருகின்றனர். புதிய புதிய டிசைன்களில் பொன் ஆபரணங்களை உருவாக்கும் இவர்களது கலைத்திறன் இன்று இவர்களை பல்வேறு காரணங்களால் ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது.
தங்கத்தை உருக்கி, ஆபரணங்களாக உருவாக்கும் நகை தொழிலாளர்கள் தங்கள் தொழிலைத் தொடர முடியாமல் வேறு தொழில் தெரியாததாலும் கடும் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட தேவைகள், செலவுகள் அதிகரிப்பு, தொழில் முடக்கத்தால் வருமானம் குறைவால் பலர் தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இன்று தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி சென்றாலும் இவர்களது வாழ்வாதாராம் அதல பாதாளத்தை நோக்கி சரிந்துள்ளது.
வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர்
ஒரு பவுன் தங்கம் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் என்ற விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், நகை தொழிலாளர்களின் நிலை குறித்து மதுரை எழுத்தாணிக்கார தெருவில் உள்ள மதுரை சர்டிபிகேட் பொற்கொல்லர் சங்கத்தின் துணைத் தலைவர் காசிராஜன் கூறியதாவது:
பெருந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நகைகள் ஆகியவற்றால் கையால் செய்யக்கூடிய பொற்கொல்லர் தொழில் மிகவும் நசிந்து விட்டது. 100-க்கு 80 விழுக்காட்டினர், ஜவுளி, செக்யூரிட்டி, உணவகங்கள், பெயிண்டர் போன்ற தொழில்களுக்கு மாறிச் சென்றுவிட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை
தற்போது உள்ள 20 விழுக்காட்டினர் தான் வாழ்வா? சாவா? என்ற நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் எங்களை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வகர்மா திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதில் உறுப்பினராக எங்கள் சங்கத்தில் உள்ளோர் அனைவரும் இணைந்தோம். ஆனால் தற்போது வரை அதனால் எந்தவித பயனும் இல்லை.
கிடப்பிலேயே உள்ளது
இது குறித்து மத்திய அரசு, தமிழக அரசு குலத்தொழில் என எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன் பிறகு தமிழக அரசு கைவினைஞர் நலத்திட்டம் என்ற பெயரில் கொண்டு வந்தது. அதன் வாயிலாக இந்த தொழிலில் உள்ள அனைவருக்கும் கடன் வசதிகள் செய்து தரப்படும் எனக் கூறினார்கள். அதுவும் தற்போது கிடப்பிலேயே உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் உதவுமா?
குறைந்தபட்சம் 20 கிராம் தங்கம் இருந்தால் தான் நகையே செய்ய முடியும் என்ற நிலையில் மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
பொற்கொல்லர் நல வாரியம் செயல்பாட்டில் இல்லை
தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட பொற்கொல்லர் நல வாரியமும் தற்போது எந்தவித செயல்பாட்டிலும் இல்லை. அதில் உறுப்பினராவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதை முதலில் எளிமைப்படுத்த வேண்டும். அதில் பதிவு செய்தால் அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 ஓய்வூதியமும் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையும், திருமண உதவித்தொகையும் வழங்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் எந்த பொற்கொல்லரும் இந்த திட்டத்தால் இதுவரை பயனடையவில்லை என்கிறார்.
நகை பட்டறை உரிமையாளர் மதுரை தெற்குவாசல் பாலமுருகன் கூறியதாவது:
ஆறு ஏழு தலைமுறையாக நாங்கள் இந்த நகை பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாகவே பொற்கொல்லர் தொழில் மிகவும் நலிந்த நிலைக்குச் சென்றுவிட்டது. இதை மட்டுமே நம்பி பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்த நகைத் தொழிலில் திருமாங்கல்யம் செய்வது என்பது மிக மங்களகரமானது.
திருமணத்தின் முக்கிய அம்சம் திருமாங்கல்யம்
பாரம்பரியமாக திருமாங்கல்யம் செய்வது என்பது திருமணத்தின் முக்கிய அம்சமான ஒரு பெண்ணையும் ஆணையும் திருமணம் எனும் உறவில் இணைக்கும் பந்தம். அதில் விஸ்வகர்மாக்கள் திருமாங்கல்யம் செய்வது என்பது ஒரு சடங்கு. அதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டில் வைத்து பெற்றோர் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில், திருமாங்கல்யத்திற்கான பொன் உருக்கி திருமாங்கல்யம் செய்யப்பட்டது.
வாவரசிகளிடம் ஆசி
திருமாங்கல்யம் செய்து முடிக்கப்பட்டதும் அதனை 5 வாவரசிகளிடம் (வாழ்வரசி) மட்டுமே கொடுத்து மாப்பிள்ளை வீட்டார் ஆசி பெற்று சென்றனர். இதுபோன்ற பாரம்பரிய சடங்குகளின் வாயிலாக திருமணங்கள் எந்த தடையும் இல்லாமல் திருமண பந்தத்தில் வேறு எந்த சிக்கல்கள் இன்றி வாழ்க்கை நல்லபடியாக சென்றது.
ஆனால், அந்த கால பாரம்பரிய சடங்கு முறைகள் போய்விட்டது. இன்று அவசர கதியில் நகை கடைகளுக்கு சென்று பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்குவது போல் திருமாங்கல்யத்தை வாங்கி செல்கின்றனர்
ஒவ்வொரு குடும்பத்திற்குமே பரம்பரையாக சென்டிமென்டாக ஆசாரிகள் இருந்தனர். காலப்போக்கில் இவை எல்லாமே மாறிவிட்டன. இதுபோன்று திருமாங்கல்யங்கள் உருவாக்குவதிலாவது பாரம்பரிய ஆசாரிகளை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை நமது அரசும் ஊக்குவித்தால் எங்களது வாழ்வாதாரம் நன்றாக இருக்கும்.
ஆந்திரம் மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருக்கும்போது இதுபோன்ற கோரிக்கைகள் அங்குள்ள விஸ்வகர்மாக்களால் வைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் பரிசீலனையில் இந்த திட்டம் உள்ளது. இதேபோன்ற கோரிக்கைகளை நாங்களும் தமிழக அரசுக்கு வைக்க விரும்புகிறோம். இந்த தொழிலில் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கின்ற 20 விழுக்காடு தொழிலாளர்களையாவது காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்றார்.
இடியாப்ப சிக்கலில் பொற்கொல்லர்கள் வாழ்க்கை
எது எப்படியோ பொற்கொல்லர்கள் வாழ்வாதாரம் என்பது தங்கம் விலை உயர்வு, வெளிமாநில தொழிலாளர்கள் படையெடுப்பு, வேறு மாநிலங்களில் இருந்து வரும் புதிய வகையான டிசைன் ஆபரணங்கள் வருகை என பல்வேறு விதமாக தொழிலை தொடர்வது என்பது இடியாப்ப சிக்கலில்தான் உள்ளது.
நகைத்தொழிலாளர் தங்களது தொழிலை தொடர மத்திய, மாநில அரசுகள் கைகொடுத்தால்தான் வாழ்வாதாரம் மேம்படும் என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.