நெல்லையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் குவிப்பு!
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது பற்றி..
நெல்லையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், 109 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி டாக்டர் பிரசன்ன குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23, 2026) நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசன்ன குமார் ஐபிஎஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது,
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை (மாநகரம் தவிர்த்து) மொத்தம் 1,272 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.
Advertisement
Advertisement
109 பதற்றமான வாக்குச்சாவடிகள் - தனிக் கவனம்
மாவட்டத்தில் மொத்தம் 109 வாக்குச்சாவடிகள் 'பதற்றமானவை' என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தச் சாவடிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க, அங்கு மட்டும் தனியாகத் துணை ராணுவப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, அவசரக்கால தேவைகளுக்காக விரைவு அதிரடிப் படைகள் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகப் பெருமளவிலான வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்
* காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் - சுமார் 1,300 பேர்
* முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் போலீஸார் - சுமார் 650 பேர்
* துணை ராணுவப் படையினர் - 484 பேர்
இந்த எண்ணிக்கை நெல்லை மாவட்டத்தின் ஊரகப் பகுதிக்கு மட்டுமே. மாநகரப் பகுதிக்குத் தனியாகப் படைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நிறைவடைந்தன. தற்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கடைசி 48 மணி நேரக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அந்த விதிமுறைகளின்படி மாவட்டக் காவல்துறை தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்துப் போலீஸாருக்கும் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து விரிவான விளக்கங்கள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ. 55 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான இறுதிப் புள்ளிவிவரங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் பின்னர் முழுமையாகப் பகிரப்படும் என்று எஸ்பி தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
தேர்தல் எவ்வித இடையூறுமின்றி நடைபெற அனைத்து ராணுவ மற்றும் காவல்துறை ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி நாளை தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்று எஸ்பி டாக்டர் பிரசன்ன குமார் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
District SP Dr. Prasanna Kumar stated that, while all arrangements are underway to ensure a peaceful election in Nellai, paramilitary forces have been deployed at 109 sensitive polling stations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.