மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி
மதுரை மாநகராட்சியின் 23-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலியானது குறித்து...
மதுரை: இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி 23-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் குமாரவேல் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மேலபனங்காடி சஞ்சீவிநகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாரவேல்(61). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும், மதுரை மாநகராட்சியின் 23-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராகவும் இருந்தாா்.
இந்த நிலையில், தனது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை செல்லூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எஸ். ஆலங்குளம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடயாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.