ஆதம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் பாசிச அடிமைக் கூட்டத்தை வீழ்த்துவோம்! - உதயநிதி ஸ்டாலின் உரை!

அம்பேத்கர் காண விரும்பிய சமத்துவத்தை, மத நல்லிணக்கத்தை நாம் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும் என்றால் பாசிச சக்திகளை நாம் வீழ்த்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: அம்பேத்கர் காண விரும்பிய சமத்துவத்தை, மத நல்லிணக்கத்தை நாம் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும் என்றால் பாசிச சக்திகளை நாம் வீழ்த்த வேண்டும். பாசிச சக்திகளும் அடிமைகளும் அனைத்துத் தொகுதியிலும் டெப்பாசிட் இழக்க வேண்டும். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆதம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசியதாவது:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆதம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையை உங்கள் முன்னிலையில் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஆதம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.

ஏற்கனவே இந்த காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் அண்ணல் அம்பேத்கரின் முதல் சிலையைத் திறந்து வைத்தேன். இன்று இந்த இரண்டாவது சிலையைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பை அமைச்சர் அன்பரசன் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். வாய்ப்பளித்த அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படித் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலை, பேரறிஞர் அண்ணா சிலை, கலைஞரின் சிலையை இன்று தமிழ்நாடு முழுவதும் நாம் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? ஏதோ அடையாளத்திற்காக மட்டும் அவர்களின் சிலைகளை நாம் திறக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் நம் முதல்வர் பேசிய கொள்கையை, லட்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

அம்பேத்கர்தான் எல்லோருக்கும் தலைவர்

திராவிட இயக்கத்துக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் மிக நெருங்கிய தொடர்பும் உறவும் உண்டு. "அம்பேத்கர்தான் எனக்கும் தலைவர், அம்பேத்கர்தான் எல்லோருக்கும் தலைவர்" என்று சொன்னவர் தந்தை பெரியார். அதேபோல கலைஞரும் அண்ணல் அம்பேத்கர் மீது மிகுந்த மரியாதையும் தனிப்பாசமும் உண்டு. அதனால்தான் கலைஞர் எப்பொழுதும் சொல்வார், "தாடி இல்லாத பெரியார்தான் அண்ணல் அம்பேத்கர், தாடி வைத்த அம்பேத்கர்தான் தந்தை பெரியார்" என்று கலைஞர் அடிக்கடி பேசுவார்.

1972-இல் இந்தியாவிலேயே முதன்முறையாக அண்ணல் அம்பேத்கர் பெயரில் கலைஞர் கல்லூரி ஆரம்பித்தார். அதன் பிறகு மகாராஷ்டிரத்தில் அண்ணல் அம்பேத்கரின் பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதற்கு அங்கு இருக்கக்கூடிய மக்கள் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதைக் கண்டித்து மகாராஷ்டிரத்தில் அண்ணல் அம்பேத்கரின் பெயரில்தான் அந்தப் பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கலைஞர். தமிழ்நாட்டிலிருந்து திமுக-வைச் சேர்ந்த அனைத்து உடன்பிறப்புகளும் தந்தி அனுப்ப வேண்டும், கடிதம் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டவர் கலைஞர்.

அதுமட்டுமல்ல, இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, முன்மாதிரியாகச் சென்னை சட்டக் கல்லூரிக்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரைச் சூட்டியது கலைஞர். இன்று கலைஞர் வழியில் நம் முதல்வர் ஸ்டாலினும் அம்பேத்கர் அவர்களைப் பெருமைப்படுத்துகின்ற விதமாகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

முக்கியமாக, அம்பேத்கரின் பிறந்தநாளைச் சமத்துவ நாளாக அறிவித்தவர் நம் முதல்வர். அதுபோல அனைவரும் படிக்க வேண்டும் என்று அம்பேத்கரின் நூல்களை எல்லாம் நம் திராவிட மாடல் அரசு இன்று தமிழில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்,.

யார் எதிரி என்று அடையாளம் காட்டியவர்கள்

ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார விடுதலையை உறுதி செய்ய ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’, வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க செல்கின்ற நம் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கொடுப்பதற்கு ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்’ என்று இப்படிப் பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இன்று நம் இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அது அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் கொள்கைகளால் மட்டும்தான் நிச்சயம் முடியும். சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக இன்று இந்தியாவில் நிறைய பேர் பேசியிருக்கிறார்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் மட்டும்தான் நமக்கு யார் எதிரி என்று சரியாக, தெளிவாக அடையாளம் காட்டினார்கள்.

குறிப்பாக எதிரிகளைத் தமிழர்கள் சரியாக அடையாளம் கண்டுகொண்டதால்தான் பாசிச சக்திகளால் தமிழ்நாட்டை இன்று வரைக்கும் தொட்டுக்கூடப் பார்க்க முடியவில்லை. நெருங்க இன்னும் முயற்சி செய்கிறார்கள், நெருங்க முடியவில்லை. அம்பேத்கர் சமத்துவம், கல்வி ஆகிய இரண்டையும் வலியுறுத்தினார்.

இன்று நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் சமத்துவத்துக்கும் கல்விக்குமான முக்கியத்துவம் கொடுக்கின்ற திட்டங்கள்தான். மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கான முதல்வர் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இப்பொழுது 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கின்ற திட்டம், எல்லாவற்றிற்கும் மேலாக இன்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டம், ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்குக் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்று பல திட்டங்களை நம் தலைவர் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த முறை, இந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் அதனுடன் சேர்த்து கூடுதலாகக் ‘கோடை சிறப்பு நிதி’ என்று மொத்தம் ரூ.5,000 ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்குக் கொடுத்திருக்கிறார்கள். எப்படியாவது பாஜக இந்தத் திட்டத்தைத் தேர்தல் வரைக்குமாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஆனால் நம் முதல்வர் அதிலும் வென்று காட்டிவிட்டார். அவர்களின் அனைத்துச் சூழ்ச்சிகளையும் முறியடித்து மூன்று மாதத்திற்குச் சேர்த்து ரூ.3,000 + 2,000 என மொத்தம் ரூ.5,000 கொடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் பொறுக்க முடியாமல்தான் இன்று மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து பல்வேறு வகைகளில் தொல்லைகளை, இடையூறுகளைக் கொடுத்துக் கொண்டு வருகிறது. இன்று நம் கழகத் தலைவருக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கைப் பார்த்து மத்திய பாஜக அரசும் அதிமுக-வும் பயந்திருக்கிறார்கள். அதனால் இன்று தேர்தல் நெருங்கிவிட்டதால், மத்திய பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கான எந்தத் திட்டங்களும் வருவதில்லை

தமிழ்நாட்டுக்கு அவர்கள் இரண்டு பேரும் மாறி, மாறி வருகிறார்களே தவிர, தமிழ்நாட்டுக்கான எந்தத் திட்டங்களும் வருவதில்லை, எந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்குவதில்லை. 12 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு புறக்கணித்துக் கொண்டு இருக்கிறது. அதேமாதிரி நாட்டு மக்களும் பாஜக-வைப் புறக்கணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பாசிச சக்திகளை நாம் வீழ்த்த வேண்டும்

எனவே, அம்பேத்கர் காண விரும்பிய சமத்துவத்தை, மத நல்லிணக்கத்தை நாம் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும் என்றால் பாசிச சக்திகளை நாம் வீழ்த்த வேண்டும். பாசிச சக்திகளும் அடிமைகளும் அனைத்துத் தொகுதியிலும் டெப்பாசிட் இழக்க வேண்டும். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

ஆகவே ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இரண்டாவது முறையாக தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால், அடுத்து வருகின்ற ஒவ்வொரு நாளும் நம் உழைப்பை நாம் கொடுப்போம். அதற்கு அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு முன்பாக அதற்கான உறுதிமொழியை ஏற்போம். "தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்று அவர் கூறினார்.

DMK YW SEC OPEN AADHAMBAKKAM AMBEDKAR STATUE

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளாட்சி அதிகாரப் பகிர்வில் திமுகவுக்கு பிரச்னை இல்லை! காங்கிரஸ் நிர்வாகி

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

SCROLL FOR NEXT