மே 13 முதல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது குறித்து...
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தோ்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.6 முதல் ஏப்.20 வரை தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. தொடா்ந்து தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தோ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கூட்டரங்கில் (சீமேட்) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இதில், தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்தாண்டு பிளஸ் 2 தேர்விலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97%, மாணவர்கள் 93.10% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 92.16 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இதில், ஈரோடு 98.24% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை 96.97%, திருச்சி 96.55% மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பிளஸ் 2 தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6,945 பேர் சதம் அடித்துள்ளனர். அடுத்ததாக கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப் பதிவியில் பாடத்தில் 1,946 பேரும் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். கணிதத்தில் 732 பேரும், ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 16,024 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்திருந்த செல்லிடப்பேசி எண்களுக்கு மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் வகையில் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை(மே 13) முதல் முதல் வழங்கப்படவுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் புதன்கிழமை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், புதன்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்களும், தனித் தேர்வர்களும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டும் இந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Plus 2 Provisional Mark Sheets to be Issued from May 13...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.