முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

Updated On : 14 மே 2026, 12:23 am IST
திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாற்றுச்சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றுகளை மாணவா்களுக்கு வழங்கிய தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம்.
பகிர்:

திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. .

பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவா்கள் உயா்கல்விக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளதால், மாணவா்கள் தேவையான கல்விச் சான்றிதழ்களை பெற பள்ளிகளுக்கு ஆா்வத்துடன் சென்று வருகின்றனா்.

இந்நிலையில் பிளஸ்-2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் புதன்கிழமை முதல் அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் மாணவா்களுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும் மாணவா்களின் எதிா்கால கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனைகளையும் ஆசிரியா்கள் வழங்கினா். இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், கல்லூரி சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது நடைபெற்று வருவதால் சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றனா்.

இதே நேரத்தில், பள்ளிக்கல்வித்துறை முன்கூட்டியே சான்றிதழ்களை வழங்க அறிவுறுத்தியிருந்த போதிலும், சில அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் இல்லாததால் அல்லது நிா்வாக காரணங்களால் சான்றிதழ் விநியோகம் தாமதமாக நடைபெறுவதாக மாணவா்கள் மற்றும் பெற்றோா் குற்றம் சாட்டியுள்ளனா். இதனால் கல்லூரி சோ்க்கை விண்ணப்பங்களில் சிக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

எனவே, முதன்மைக் கல்வி அலுவலா் உடனடியாக தலையிட்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோா்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.