தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவு அளிக்கவில்லை: தவெக தகவல்
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு சனிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளிக்கவில்லை என தவெக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாள்களை எட்டியும் ஆட்சியமைப்பது யார்? என்ற கேள்வியும், குழப்பமும் தொடர்ந்து நீடித்து வருகிறது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் 108 தொகுதிகளுடன் ஆட்சியமைக்க கோரிய விஜய்க்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆதரவு கோரியிருந்தாலும் அவர்களுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 118-க்கு இன்னும் 2 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விசிக இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளிக்கவில்லை என்று தவெக மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் கூறினார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது; இருப்பினும், மொத்தம் 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாமல் பின்தங்கியுள்ளது.
Advertisement
Advertisement
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. தவெக தலைவா் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 107 இடங்கள் மட்டுமே அக் கட்சியிடம் உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், விசிகவின் ஆதரவுக்காக காத்திருக்கின்றன.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தவெக, விசிக இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான சித்தாந்த ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு, தவெக தலைவர்கள் விசிக-வை அணுகி பேசி வருவதாகவும், விஜய் அம்பேத்கரின் தீவிர ஆதரவாளர். அவர் சமூக நீதிக்காகப் போராடி வருகிறார். விசிக தலைவர் திருமாவளவனும் அதே கொள்கையுடையவர். அவர் தவெக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். அந்தக் கோரிக்கையை முன்வைப்பதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன; அதற்காகவே நாங்கள் காத்திருக்கிறோம். விசிக மற்றும் தவெக சித்தாந்தங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதால், இரு கட்சிகளும் ஒன்றிணைந்தால் அது ஒரு மிக வலுவான ஆதரவு அமைப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கம் விதிகளை மீறியதாகக் காரணம் காட்டி வெள்ளிக்கிழமை (மே 8) முடக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் ஆதரவு குறித்த ஊகங்கள் எழுந்த சூழலில் ஸ்பூர்த்தி அருணின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சியை அமைப்பதில் தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விசிக தரப்பிலிருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட செய்திகளைத் தொடர்ந்தே, இந்த 'எக்ஸ்' பக்கம் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த தவெக ஆதரவாளர்கள், விஜய் விரைவில் முதல்வராகப் பதவியேற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். "விஜய் தற்போதைய தடைகளைத் தகர்த்தெறிந்து, தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்பார் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்," என்று கோவையைச் சேர்ந்த தவெக ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தவெக-விற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன; அதேவேளையில், விசிக தனது நிலைப்பாட்டை இன்னும் முறையாக அறிவிக்காத நிலையில், இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. அப்படி விசிக ஆதரவு கிடைத்தால் 118 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் மீண்டும் ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஆளுநர் ஏற்று ஆளுநர் முதல்வர் பொறுப்பேற்க விஜய்-க்கு அழைப்பு விடுத்தால் தமிழ்நாட்டின் முதல் சிறுபான்மை சமூக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்பது உறுதி. 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு, திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு வெளியே இருந்து தமிழக அரசை வழிநடத்தும் முதல் தலைவராக விஜய் திகழ்வார்.
TVK leader Spoorthi Arun on Saturday said that the VCK is yet to officially extend support to TVK chief C Joseph Vijay for government formation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.