வீடுகளை அலங்கரிக்க தேங்காய் சிரட்டையில் கைவண்ணம்!
வீடுகளை அலங்கரிக்க தேங்காய் சிரட்டையில் பல பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கலாம்.
பொதுவாக தேங்காயை உடைத்து அதற்குள் இருக்கும் தேங்காயை துருவியோ அல்லது பத்தைப் போட்டோ எடுத்ததும் முதலில் செய்வது கொட்டாங்குச்சி எனப்படும் தேங்காய் சிரட்டையைத் தூக்கி குப்பையில் போடுவதைத்தான்.
ஆனால், சிலர், அதனை சேமித்து வீட்டில் சாம்பிராணிப் போடவும் பயன்படுத்துவார்கள்.
பக்தி அதிகம் கொண்டவர்கள், கொட்டாங்குச்சிகளை சேகரித்து வைத்து, கோயில்களுக்குச் சென்று பொங்கல் வைக்கும்போது பயன்படுத்திக் கொள்வார்கள்.
Advertisement
Advertisement
மற்றபடி, அதனை நல்ல முறையில் பயனுள்ள முறையில் பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவுதான்.
ஆனால், கொட்டாங்குச்சியை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று இணையத்தில் தேடினால் யோசனைகள் கொட்டிக்கிடக்கின்றன.
அதில் ஒன்றுதான் இங்கே சொல்ல வருவது, ஒரு பெரிய தேங்காயின் இரண்டு மூடிகள் அல்லது வெவ்வேறு பெரிய தேங்காய் சிரட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில், இரண்டும் வட்டவடிவமாக உடைக்கப்பட்டிருப்பது முக்கியம். அதன் மீதுள்ள நார்களை அகற்றிவிட்டு உப்புக் காகிதம் போட்டு தேய்த்து மெழுமெழுவென மாற்றிக் கொள்ளலாம்.
பிறகு, அதன் மூடப்பட்ட பகுதிகளை எதிரெதிர் திசையில் ஓட்டை போட்டு ஒட்டவைத்துவிட்டால் அழகிய வேலைப்பாடுகளை செய்து ஸ்டான்ட் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரே ஒரு பெரிய தேங்காய் சிரட்டையை சுத்தம் செய்து வெளியே நல்ல வண்ணம் அடித்துவிட்டு, அடிப்பாகத்தில் மற்றொரு மெல்லிய தேங்காய் சிரட்டை ஸ்டான்ட் போல இணைத்துவிட்டால் பேனா ஸ்டேன்ட் ரெடி.
இன்னும் சிலர், நல்ல கூம்பு போன்ற தேங்காய்கறை உடைத்து அதனை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி தேநீர் கோப்பைகள் போல பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.
சிறிய சாம்பிராணிகளை ஏற்றும்போது புகைகளை பரவ விட, ஒரு தேங்காய் சிரட்டையை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி உடையாமல் ஆங்காங்கே சிறு துளைகள் போட்டால் போதும்.
தேங்காய் சிரட்டையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று இணையத்தில் தேடினால் பல வித்தைகள் வருகின்றன. இவற்றைப் பார்த்து நாமும் செய்தால், வீட்டை ஒரு கலைக்கூடமாக மாற்றலாம்.